மதுரை ஆதீனத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புகார் மனு அளித்தனர்.
 
மதுரை ஆதீனம் கார் மோதி விபத்து
 
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் சொகுசு காரில் சென்றபோது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாக கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி., காட்சியை காவல்துறை தரப்பில் நேற்று வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக கூறி அறிக்கை வெளியிடப்பட்டது.
 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திர் புகார் மனு
 
இதனையடுத்து உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மதமோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், மதுரை ஆதீனத்தை இதுபோன்று பேச வைத்த பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து உரிய விசாரணை நடத்த கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
 
மதுரை ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்
 
இது குறித்து  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி செல்வராஜ் பேசும்போது, “மதுரை ஆதீனம் மதமோதலை தூண்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டை பரப்பியுள்ளார். மேலும் இவர் பேசியதற்கு பின்புலமாக இருந்தவர் நபர்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தி மதுரை ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.