தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தால் அனைவரும் சுடுகாட்டுக்கு தான் போகும் நிலை உருவாகும், மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல்கள் கூட காணாமல் போகும் நிலை உருவாகும் என மாற்றுத்திறனாளி வேதனை.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி
மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதாகவும், குப்பை அள்ளும் வாகனங்களுக்கு கூட பஞ்சர் போடாத நிலையில் குப்பைகள் கிராமம் முழுவதும் கொட்டிகிடப்பதாகவும் கூறி அதே கிராமத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில் தன் மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலைக்கு இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளி முத்துகிருஷ்ணன் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கருடன் தங்கள் தனது பகுதியான வரிச்சியூர் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து புகைப்படத்தை ஸ்டிக்கராக எடுத்து வந்து அதனை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவர்களில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
புகைப்படங்களுடன் ஸ்டிக்கர்
அந்த ஸ்டிக்கர்களின் ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு பணம் இருக்கக்கூடிய அரசுக்கு தங்களது பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி சுத்தம் செய்வதற்கும் பஞ்சராகி உள்ள குப்பை வாகனத்தை சரி செய்வதற்கும் பணம் இல்லையா என கேள்வி எழுப்பி வாசகங்களுடன் புகைப்படங்களுடன் ஸ்டிக்கராக ஒட்டிச் சென்றார்.
பஞ்சர் பார்க்க முடியாத நிலையில் குப்பை வண்டி
இதுகுறித்து பேசிய மாற்றுத்திறனாளி முத்துகிருஷ்ணன்..,” எங்களது பகுதியான வரிச்சியூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பழைய தண்ணீரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. செடி மரத்தோடு நிலையில் ப்ளீச்சிங் பவுடர் கூட வாங்க முடியாத நிலைக்கு உள்ளாட்சி நிர்வாகம் உள்ளது. குப்பை அள்ளும் வாகனங்கள் பஞ்சர் பார்க்க முடியாத நிலையில் பயன்படுத்த முடியாமல் அலுவலகங்களுக்கு முன்பாகவே செயல்பாடின்றி கிடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை புகார் அளித்தேன்.
பிரச்னையை தீர்ப்பதற்கு பணம் இல்லையா?
ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது ஓரணியில் தமிழ்நாடு என வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். அதற்கெல்லாம் பணம் இருக்கும் அரசுக்கு, இது போன்ற பொதுமக்களுக்கான பிரச்னையை தீர்ப்பதற்கு பணம் இல்லையா?. என்பதை எடுத்துரைக்கும் வகையில் தான் தனது பகுதியில் உள்ள பிரச்னைகளை ஸ்டிக்கராக எடுத்து வந்து அதிகாரிகளுக்கு தெரிய வேண்டும், என்பதற்காக ஒட்டியுள்ளேன்” என்றார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவரும் சுடுகாட்டுக்கு போகும் நிலைதான் உருவாகும். எனவும் மாற்றுத்திறனாளிகளில் கைகளில் இருக்கும் ஊன்றுகோல்கள் கூட காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என தனது வேதனையை வெளிப்படுத்தினார்.