பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு விருதுடன் கூடிய விருந்து அளித்த காவல் ஆணையரின் செயலால் நெகிழ்ச்சியடைந்த காவலர்கள்.

 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்த விழாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் , திருத்தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரினை வடம்பிடித்து இழுத்துசென்றும் சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று கள்ளழகர் சித்திரை திருவிழாவில் எதிர்சேவை தொடங்கி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல், தீர்த்தவாரி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், பூப்பல்லக்கு, கோயில் திரும்புதல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த திருவிழாவின் போது பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


 

 

குறிப்பாக மதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இந்த ஆண்டு புதிய நடைமுறையாக மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சுழற்சி முறையில் காவல்துறையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தினார். துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் என தனிதனியே குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சட்ட ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் விழா தொடர்பாக பலமுறை கள ஆய்வு மேற்கொண்ட நிலையில் கடந்த ஆண்டு கூட்ட நெருக்கடியால் ஏற்பட்ட உயிரிழப்பு போன்று அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக சாமியை அழைத்துவரும் பகுதிகளில் சாமி ஊர்வலத்திற்கு முன்பாக காவல்துறை சார்பில் தனிக்குழுவினர் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்தினர்.






இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம், திருக்கல்யாண கூட்டத்தில் எந்தவித திருட்டோ, கூட்ட நெருக்கம் போன்ற எவ்வித அசம்பாவிதம் இன்றி நடத்திமுடித்தனர்.  இந்நிலையில் தொடர்ச்சியாக 22 நாட்களிலும் மதுரை காவல்துறையினர் தொடர்ச்சியாக பணியாற்றி குற்றம்சம்பவங்களை தடுத்தி நிறுத்தி கடுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஏற்பாட்டில் பாரா கானா என்ற பாராட்டு மற்றும் விருந்து அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.



 

மதுரை ஆயதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல  இணை ஆணையர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைத்துபிரிவு காவலர்களுக்கும் சிறப்பாக பணியாற்றிதற்கான விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விருது அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவலர்களுக்கான விருந்து வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் காவலர்களுக்கு பிரியாணி, சிக்கன், மீன், முட்டை, இனிப்பு, ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை வழங்கி தொடங்கிவைத்தார்.



 

தொடர்ச்சியாக ஒவ்வொரு சரக வாரியாக உணவுகள் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்  ஒவ்வொரு பகுதிக்கும் மாநகர காவல் ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர் நரேந்திரன் நாயர் பேசியபோது : லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில் மழை வெயில் என பார்க்காமல் பக்தர்கள் இடையூறுன்றி சாமி் தரிசனம் செய்ய வைத்ததோடு, அவர்களை பாதுகாக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டீர்கள் , பொதுமக்களை பாதுகாக்க அர்ப்பணிப்போடு காவல்துறையினர் பணியாற்றினர். மேலும் காவல்துறையினருக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம், அறநிலையத்துறை, வருவாய்துறை முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினர் என்றார். அனைத்து காவலர்களுக்கு தலைமை தாங்கி பக்தர்களை பாதுகாத்து விழா சிறப்பாக நடைபெற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.



இதுவரை இல்லாத வகையில் தொடர்ச்சியாக 22 நாளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் களைப்பை போக்கி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விருதோடு விருந்தும் வழங்கிய மாநகர காவல் ஆணையருக்கு காவல்துறையினர் நெகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்துகொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்துகொண்ட நிலையில் பணியின் காரணமாக காவல்நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு உணவு பார்சலாக கொடுத்துவிடப்பட்டது கூடுதல் சிறப்பாக அமைந்திருந்தது.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண