கரூர் மாவட்டத்தில்  சாமி கும்பிடுவதில் பட்டியலின  மக்களிடம் பாகுபாடு காட்டுவதாக தொடரப்பட்ட வழக்கு. அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றமே - நீதிபதிகள்

மதுரைக் கிளையில் மனு
 
கரூரைச் சேர்ந்த சுப்ரமணி, "கரூர் மாவட்டம் பொருந்தலூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி தீச்சட்டி எடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் செல்வதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் ஊருக்குள் உள்ள சாதிய பாகுபாடுகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என வழக்கு தாக்கல் செய்திருந்தார். கரூர் மாவட்டம் மண்மங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ், " கரூர் மாவட்டம், நெரூர் வடக்கு பகுதி ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவின்போது தேரை பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கும் கொண்டு செல்லவும், எவ்விதமான பாகுபாடும் இன்றி விழா நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
 
விசாரணை
 
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. கரூர் மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜர். அப்போது மத்திய மண்டல காவல் துறை தலைவர் ( ஐ.ஜி ) ஜோஷி நிர்மல்குமார்
கரூர் மாவட்ட ஆட்சியர் - தங்கவேல் கரூர் மாவட்ட காவல் எஸ். பி -  பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் நீதிபதி முன் ஆஜராகி இருந்தனர். அரசு தரப்பில், ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் அஜ்மல் கான் மற்றும் வீராக்கதிரவன்  "எந்த ஒரு சாதிய பாகுபாடும் இல்லை. வேறுபாடுகளைக் களையும் வகையிலேயே
காலணி என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை உள்ளது. இரட்டை குவளை தொடர்பாக எந்த புகாரும் வழங்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது.
 
மாறு வேடத்தில் ஆய்வு
 
அதற்கு நீதிபதிகள்..,"  சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசின் கொள்கைகள் அனைத்தும் பேப்பர் வடிவில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் இல்லை. அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றமே. ஒவ்வொருவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் இது போன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. யாராக இருந்தாலும் மரியாதை என்பது தானாக வர வேண்டும்" என தெரிவித்தனர். சுதந்திரம் அடைத்து 80 ஆண்டுகள் ஆன பின்னரும் இது போன்ற வழக்குகள் தாக்கலாவது வேதனை அளிக்கிறது. நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஆனாலும் மீண்டும் மீண்டும் இது போன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என தெரிவித்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கரூர் மாவட்ட ஆட்சியரிடம், "இவை தொடர்பாக புகார் பெறப்பட்டவுடன் தனிப்பட்ட முறையில் ஏன் விசாரணை செய்யவில்லை? மாறு வேடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்திருந்தால், உண்மையானக் பிரச்சினை தெரிந்திருக்கும். இன்னும் சில ஊர்களில் சட்டை அணிந்து போக முடியவில்லை, தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை, அதனை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஏற்கத்தக்கதல்ல. மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமை" என தெரிவித்தனர்.
 
வழக்கை ஒத்திவைத்தனர்
 
தொடர்ந்து, கோயில் தேர் ஒரு தெருவிற்குள் போகும், மற்றொரு தெருவிற்குள் போகாது என்பது தான் பிரச்னைக்கு முக்கிய காரணம். திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும். திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  என்பதற்காகத்தான்" என குறிப்பிட்டனர். மேலும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண சாதிய ரீதியான வேறுபாடுகளை களைவதற்காக பாடுபடும் சமூக ஆர்வலர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் அரசு அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து இது போன்ற பிரச்னை இனியும் தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். மேலும் இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.