மதுரையில் தேவர் ஜெயந்தி முன்னாள் திமுக மண்டல தலைவர் VK.குருசாமி வீட்டில் நடத்திய சோதனையில் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சோதனை

 

வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த அல்லது சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் பிரபல ரவுடியான கீரைத்துரை பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சியின் திமுக கிழக்கு மண்டல தலைவராக இருந்தவர் வி.கே.குருசாமி. ஏற்கனவே, வி.கே.குருசாமிக்கும், அதிமுகவை சேர்ந்த ராஜபாண்டி தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட VK.குருசாமி அவரது மகன் VKG.மணிகண்டன் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். 

 

கொலை முயற்சி

 

வி.கே.குருசாமி மீது அடிதடி வழக்குகள், கட்டப்பஞ்சாயத்து என 19 வழக்குகளும், 5 கொலை வழக்குகள் உட்பட 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேபோல் அவரது மகன் வி.கே.ஜி.மணிகண்டன் மீது 4 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் VK.குருசாமி பெங்களூரில் தலைமறைவாக இருப்பதாக தகவல் தெரிந்த ராஜபாண்டியின் உறவினரான சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளி வெள்ளை காளி தனது ஆதரவாளர்களை சிறையிலிருந்தவாரே திரட்டி திட்டம் தீட்டி கொலை செய்ய அனுப்பிவைத்து தனியார் உணவகத்தில் வைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். 

 

துப்பாக்கியுடன் கைது

 

இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த VK.குருசாமி தற்போது அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். மகன் VKG மணிகண்டன் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரது கூட்டாளி பவ் என்கின்ற பழனிமுருகன் (30), டுமினி என்கின்ற முனியசாமி (25) ஆகிய இருவரும் விகே.குருசாமிக்கு பாதுகாப்பாக அவரது வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில், அவரது வீட்டில்  கீரைத்துரை போலீசார் சோதனை மேற்கொண்டதில் நாட்டுத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதில் பழனி முருகன், முனியசாமி ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டு கீரைத்துரை போலீசார் காவலில் வைத்திருக்கின்றனர்.

 

நாட்டு துப்பாக்கியை பறிமுதல்

 

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திர பதிவேடுகள் கொண்ட ரவுடிகளின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் முன்னாள் மதுரை மாநகராட்சி திமுக கிழக்கு மண்டல தலைவராக இருந்த வி.கே.குருசாமி மற்றும் அவரது மகனின் கூட்டாளிகளாக இருந்த நபர்கள் சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டு போலீசார் சிறையில் அடைத்திருப்பது மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மதுரையில் உள்ள பிரபல ரௌடியும், திமுகவின் முன்னாள் கிழக்கு மாநகராட்சியின் மண்டல தலைவராக இருந்த வி.கே.குருசாமி வீட்டில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் போலீசார் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.