தஞ்சையை அடுத்துள்ள தனியார் பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த +2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை, செய்து கொண்டார்.இந்த விவகாரம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் அவசர வழக்காக எடுக்கக்கோரினார்.நேற்றைய தினம் அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, காவல்துறையினர் மீது சிறுமியின் பெற்றோரை மிரட்டுவதாக புகார் முன்வைக்கப்படுகிறது. எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்கை விசாரிக்க அறிவுறுத்தினார்.
மீண்டும் மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர வழக்காக எடுத்து விசாரித்தார்.மனுதாரர் தரப்பில், "மாணவி நன்றாக படிக்கக்கூடியவர். அவரை விடுதி கணக்குகளை பார்க்குமாறு தொடர்ச்சியாக வற்புறுத்தியதால், தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் சிலர் மாணவியை மதம் மாற்ற கட்டாயப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாணவி பேசியதாக வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. அதனை பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை காவல் கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்" என தெரிவித்தார்.
அரசுத்தரப்பில், " தொடர்புடைய வாடர்ன் ஜனவரி 18ஆம் தேதியே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மாணவியின் தந்தை மதம் மாறச்சொன்னது குறித்து, காவல்துறையினரிடம் தெரிவித்தனரா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில், அது குறித்து விசாரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, " ஏதேனும் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் தரப்பில் இல்லை என பதிலளிக்கவே, நீதிபதி," அப்படியெனில் மறு உடற்கூராய்வு தேவையில்லை" என குறிப்பிட்டார்.
தொடர்ந்து நீதிபதி, " மாணவி திருக்காட்டுப்பள்ளி உள்ள தனியார் பள்ளியில் பயின்றுள்ளார். ஜனவரி 09 ஆம் தேதி விடுதி வளாகத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். அது குறித்து பெற்றோருக்கு மறுநாள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலனில் முன்னேற்றமின்றி போகவே, தஞ்சை அரசு மருத்துவமனையில் ஜனவரி 15 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் 16ஆம் தேதி மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்து அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி சிறுமி 19ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
அவரது இறப்பிற்கு முன்பு, பதிவு செய்யப்பட்ட வீடியோ என சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவியுள்ளது. அதில் வேறு மதத்திற்கு மாற்ற கட்டாயப்படுத்தியதாக சிறுமி கூறியுள்ளார் என தெரியவருகிறது. இது முரண்பாட்டை ஏற்படுத்துவது போல் தெரிகிறது. அந்த வீடியோவை எடுத்த நபரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்போவதாக தஞ்சை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் ஏற்கனவே தஞ்சை மருத்துவக்கல்லூரி தடய அறிவியல் மருத்துவர்கள் உதயபானு, அருள்மதி கண்ணன் ஆகியோரால் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.
மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சந்தேகம் எதையும் அவரது பெற்றோர் முன்வைக்கவில்லை. ஆகவே, மறு உடற்கூராய்வு செய்ய தேவையில்லை. மாணவியின் உடலை, பெற்றோர் பெற்றுக் கொண்டு அடக்கம் செய்ய வேண்டும்.
நாளை மாணவியின் தந்தையும், தாயும் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜராகி, தனது மகள் தன்னிடம் தெரிவித்தவை குறித்தும், மாணவியின் இறப்பு குறித்தும் வாக்குமூலம் அளிக்கவும், அதனை பதிவு செய்து தஞ்சை நீதித்துறை நடுவர் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். மாணவியின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை செய்து தர வேண்டும் எனவும், அவற்றில் காவல்துறையினர் தலையிடக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு பட்டியலிட ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்