ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என்றும் மதுரைக்கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சக்திகுமார் சுகுமார குருப், ”ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது. எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாக எதிராகவோ ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது.
சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது, இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ , மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது. பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும், நிகழ்ச்சிகள் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்” என கடுமையான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு :
கடந்த 2020ல் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த லூயிஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
"தமிழ்நாடு அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவு சட்ட விரோதம் இந்த அரசாணையை ரத்து செய்து, மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் கூறியுள்ள கோரிக்கையின்படி கடந்த காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம பகுதிகளிலும் வழக்கம் போல கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது . இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.