உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை காணலாம். 


கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்


 மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா சித்ரா பௌர்ணமிக்கு 4 நாட்கள் முன்னதாக கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. 


தன்னுடைய தங்கை மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடக்கப் போகும் செய்தியை அறிந்து அந்த வைபத்தை காண கள்ளழகர் திருக்கோலத்தில் தன் இருப்பிடத்தில் இருந்து 24 கிமீ தூரத்திலுள்ள  மதுரையை நோக்கி வருவார். அதன்படி நேற்று முன்தினம் (மே 3) மாலை தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார்.  


கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய அவர் கண்டாங்கி பட்டுடுத்தி, நெற்றிப்பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரம் ஆகியவற்றுடன் மேள, தாளத்துடன் மதுரை நோக்கி சென்றார். வழியெங்கும் கூட்டம் கூட்டம் அழகர் வருவதை காண மக்கள் திரண்டனர். மேலும் அழகர் வழியில் இளைப்பாறி ஆசி வழங்க பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இதனைத் தொடர்ந்து நேற்று (மே 4) மூன்று  மாவடியில் மதுரை மக்கள் கள்ளழகரை வரவேற்கும் எதிர் சேவை வைபவம் நடைபெற்றது.  இதில் கலந்துக் கொண்ட பெண்கள் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி அழகரை வழிபட்டனர். மேள,தாளங்கள் வாண வேடிக்கைகள் என களைக்கட்டிய அழகர் வைபவத்தில் பக்தர்கள் பலரும்  தங்களை கள்ளழகராகவும், கருப்பண்ண சாமியாகவும் வேடமிட்டு ஆடிப்பாடி அழகரை வரவேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 


நேற்று இரவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலை அடைந்த கள்ளழகருக்கு விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் நடைபெற்றது. இதில் பச்சை பட்டுடுத்தி அழகர் தங்க பல்லக்கில் இறங்கினார். சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா..கோவிந்தா.. என்ற கோஷம் விண்ணதிர கள்ளழகரை வரவேற்றனர். மேலும் தோல் பைகளால் தண்ணீரை பீய்ச்சி அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


பச்சை பட்டுடுத்தினால் என்ன நடக்கும்?


பொதுவாக கள்ளழகர் உடுத்தும் பட்டின் நிறத்தை கொண்டு அந்த ஆண்டில் நாடு எப்படி இருக்கும் என கணிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று பச்சை படுத்தி அழகர் இறங்கியதால் நடப்பாண்டு நாடே செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை ஆகும். கடந்த சில சில ஆண்டுகளாகவே வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை நிறப் பட்டு அணிந்தே வைகையாற்றில் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.