மதுரை விமான நிலைய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் ரூ.88 கோடியில் நவீன வசதிகளுடன் வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் -ம்மதுரை விமான நிலைய இயக்குநர் தகவல்.

மதுரை விமானநிலையம்  
மதுரை அவனியாபுரம் அருகே மதுரை விமானநிலையம் அமைந்துள்ளது. இந்த விமானநிலையம் தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த சூழலில் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேர சேவையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரையில் இருந்து துபாய், சிங்கப்பூர், ஸ்ரீ லங்கா உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள் மற்றும் டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை உட்பட உள்நாட்டு விமானங்களும் வந்து செல்கின்றன. இந்நிலையில் மதுரை விமான நிலைய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் ரூ.88 கோடியில் நவீன வசதிகளுடன் வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என மதுரை விமான நிலைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
மதுரை விமானநிலையம் 2-ம் தரநிலைக்கு உயர்த்தப்பட்டது.
 
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டு சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் பயணிகளின் வருகையை அடிப்படையாக கொண்டு, மதுரை விமான நிலையம், 3-ம் தரநிலையில் இருந்து 2-ம் தரநிலைக்கு உயர்த்தப்பட்டது. இதனால், மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
 
ரூ.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு - பணிகளும் முடிந்தது
 
இந்தநிலையில், கூடுதல் விமான இயக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இதுதவிர விமான ஓடு தளம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்ட மேம்பாட்டுப் பணிகள், மதுரை விமான நிலையத்தில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி. டவர்) அமைக்கும் பணிகள் கடந்த 2021-ல் தொடங்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் அமையும் இந்த வான் வழிக்கட்டுப்பாட்டு மையத்திற்கு, ரூ.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அந்த பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது.