தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் மிகவும் முக்கியமான விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. சர்வதேச விமான நிலையமாக செயல்படும் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் கேன்களுடன் போராட்டம்:
இதற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாற்று இடம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருந்த நிலையில், மாற்று இடம் இதுவரை தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாற்று இடம் தராமலே அப்பகுதி மக்களை காலி செய்ய காவல்துறையினரும், அதிகாரிகளும் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
இதைக்கண்டித்து அப்பகுதி மக்கள் காலை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என அப்பகுதி மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் மண்ணெண்ணெய் கேன்களுடன் அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலைய விரிவாக்கம்:
இதுவரை 146 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் மாற்று இடம் வழங்காமல் அரசு தங்களை மாறக்கூறுவது ஏற்புடையதல்ல என்று பொதுமக்கள் அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் தண்ணீர், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் மேலும் பல நாடுகளுக்கு மதுரையில் இருந்து நேரடியாக விமானங்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக அரசு விமான நிலையத்தை விரிவாக்க திட்டமிட்டது. இதையடுத்து, விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு கிராம நிலத்தை அரசு கையகப்படுத்த முடிவு செய்தது. இதற்காக நிலத்தை கையகப்படுத்த கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது பட்டாக்களையும் அரசு பெற்றுள்ளது. அதற்கான இழப்பீடும் வழங்கியுள்ளது.
தற்காலிக வாபஸ்:
அதேசமயம் மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையுடன் மாற்று இடம், அரசு வேலை வழங்கக்கோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதே அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு ஆகும். திடீரென அரசு அதிகாரிகள் இன்று வீடுகளை காலி செய்ய வலியுறுத்தியதும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உரிய கால அவகாசமும், மாற்று இடமும் வழங்கக்கோரி இன்று காலை முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து, அப்பகுதி மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.