மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026ல் முடிக்கப்படும் - மத்திய அரசு அறிக்கை தாக்கல்
மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் மனு செய்து இருந்தார்.
இந்த மனு விசாரணையின் போது மத்திய அரசு 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்திருந்தது இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, மத்திய முதன்மைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காலம் 5 வருடம் 8 மாதம் ஆகும். (மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026)
* அதிக செலவு மற்றும் அதிக நேரத்திற்கான அனுமதி மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி செலவின துறை பரிசீலனையில் உள்ளது.
* மதுரையிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை எம்பிபிஎஸ் படிப்பு ராமநாதபுரம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள்,எவ்வாறு அக்டோபர் 2026ல் பணிகள் முடிவடையும் என்பது குறித்த நிலை அறிக்கையை மத்திய முதன்மை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.
மற்றொரு வழக்கு
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமான உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டும் என்ற மத்திய வருமான வரி சட்டப்பிரிவை செல்லாது, என்றும் வருமான வரிச் சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட கோரிய வழக்கில், மத்திய சட்டத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், மத்திய பொதுத்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் சேர்ந்த சீனிவாசன். உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய (உயர் சாதி) வகுப்பினருக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வியில் 10 சதவீத இடஒது்கீடு வழங்கி அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் ரூ.8 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம், 5 ஏக்கருக்குள் விவசாய நிலம், நகர்பகுதியில் ஆயிரம் சதுரடிக்குள் இடம், கிராமப்புறங்களில் நூறு சதுர மீட்டருக்குள் குடியிருப்பு இருப்பவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினை பெற முடியும்.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 103வது சட்டத் திருத்தம் செல்லும் என 7.11.2022-ல் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய வருமான வரிச் சட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.50க்கும் அதிகமாக உள்ள அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வருமானம் பெறுபவர்கள் அனைவரும் பொருளாதாரரீதியின் முன்னேறியவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அப்படியிருக்கும் போது பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு பெறுவதற்கான அதிபட்ச வருமான வரம்பு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதம். இது மக்களை பொருளாதார ரீதியில் பாகுபாடு பார்ப்பது ஆகும். எனவே ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என மத்திய வருமான வரி சட்டப்பிரிவை செல்லாது, அரசியலமைப்பு சட்டத்து விரோதமானது என அறிவிக்கவும், அதுவரை வருமான வரிச் சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயணபிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக மத்திய சட்டத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், மத்திய பொதுத்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.