மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரி வருகிற பொங்கல் அன்று செயல்படாது- 2027ல் வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
மதுரையில் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் 4.37 கோடி ரூபாய் செலவில் உபகரணங்கள் மற்றும் உயர் மருத்துவ மேம்படுத்தப்பட்ட உடற்கூறாய்வு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மதுரை மாநகராட்சி துணை மேயர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்...," திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பின் மதுரை அரசு இராசாசி தலைமை மருத்துவமனைக்கு 420 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்டி முடிக்க மத்திய அரசை கோரிக்கை
மதுரை அரசு இராசாசி தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள்தோறும் உள்நோயாளியாக 3500 பேரும் வெளி நோயாளியாக 7000 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 934 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இம்முகாம்களில் கடந்த வாரம் வரை 14,21,227 பேர் பயனடைந்து உள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்டி முடிக்க மத்திய அரசை கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அரசின் அதிகாரியை அழைத்து கொண்டு ஜப்பான் சென்று நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தலைக்காயம், அறுவை சிகிச்சை போல அறுவை சிகிச்சை அளிப்பதற்கு மட்டுமே இராசாசி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் தொகுதி 2027 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது என கூறினார்.