மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கர் இருபோக சாகுபடியும் மேலூர், மேலூர் கடைமடைப் பகுதியில் ஒரு போகச் சாகுபடியும்1.5. லட்சம் ஏக்கர் நெல் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் மேலூர் ஒரு போக பாசன விவசாயத்திற்கும், பெரியார் நீர் பாசனத்தில் இருந்து நீர் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது மேலூர் மற்றும் திருமங்கலம் ஒரு போக பாசன விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.



 

அப்போது மாவட்ட ஆட்சியர் நீண்டநேரமாக அமைதியாக இருந்த நிலையில் கொதித்தெழுந்த விவசாயிகள் தண்ணீர் திறக்காவிட்டால் விவசாயம் அழிந்து வேறு இடங்களுக்கு இடம்பெறும் சூழல் ஏற்படும் என மாவட்ட ஆட்சியரிடம் கூறினர். அப்போது உயர்நீதிமன்றத்தில் தண்ணீர் திறப்பு குறித்து வழக்கு இருப்பதால் தீர்ப்பை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என கூறியபோது விவசாயிகள் நீதிமன்றத்தை காரணம் கூறி தண்ணீர் திறக்காமல் இருக்க கூடாது என கூறி வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு போக பாசன விவசாயிகள் ஒரு போக பாசன விவசாயிகள் இடையே மாவட்ட ஆட்சியர் முன்பே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்ளாமலே அமைதி காத்தார். தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து தண்ணீர் திறப்பு குறித்த திட்டமிடல் குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகளே ஒரு திட்ட அறிக்கை கொடுத்தனர். எப்படியாவது தண்ணீர் திறங்கள் உங்களை மனித கடவுளாக பார்க்கிறோம் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை பார்த்து கெஞ்சினா். ஆனால் மாவட்ட ஆட்சியர் தண்ணீர் இல்லை, நீதிமன்றம் முடிவு வரட்டும் என கூறி பதில் அளித்ததால் விவசாயிகள் அப்செட் ஆகினர்.



 

கடந்த 2 மாதங்களாக ஒரு போக பாசன விவசாயத்திற்கான தண்ணீர் திறப்பு தொடர்பாக பல போராட்டங்கள் மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையிலும் மாவட்ட ஆட்சியர் உரிய முடிவு எடுக்காத நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தின் போது விவசாயிகள் பேசுவதற்கு மைக் வழங்காத நிலையில் மைக் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் வழங்கவில்லை, இதனிடையே விவசாய குறைதீர் கூட்டத்தை முன்னிட்டு விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்பதால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு போக பாசன விவசாய பகுதிக்கு தண்ணீர் திறப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்காத நிலையில் விவசாய கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். 

 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவசாயிகள், "இரு போக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட்டுவிட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல் மாவட்ட நிர்வாகமும், அரசும் ஏதோ பின்புலத்தோடு வஞ்சிக்கிறது. இதனால் ஒரு போக பாசன விவசாயிகள் நட்டாற்றில் நிற்கிறோம், விவசாயம் இல்லாமல் வடமாநிலங்களுக்கு பிழைப்பு தேடி செல்லும் நிலையை உருவாக்குகிறது இந்த அரசு, விவசாயிகள் இது போன்று விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தமிழக அரசே காரணம் என" குற்றம்சாட்டினர்.