அடிப்படையில ஒரு இஞ்சினியரிங் மாணவன் நான், துபாய்ல கை நிறைய சம்பளம் வாங்குனேன்.  திடீர்னு விட்டுட்டு வந்து  சினிமாவுல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். நடுத்தர வர்க்கத்துக்கான பொருளாதார பிரச்னைகள் துரத்துதுன்னு திரும்பவும் சினிமாவ விட்டுட்டு துபாய்ல இஞ்சினியர் வேல, இப்போ அதையும் விட்டுட்டு இஞ்சினியரிங் முடிச்ச என் தம்பி கூட சேர்ந்து கறிக்கடை வேலை பார்த்துட்டு இருக்கேன். கூடவே நான் பார்க்குற மனிதர்கள், கறிக்கடைய பத்தின நுணுக்கங்கள்,  buhari junction னு  யூடிபராகவும் இருக்கேன்.



 

கேட்குற உங்களுக்கே தலை சுத்துதுல்ல என்னோட கேரியர் கிராப். கூட இருந்து பார்க்குற குடும்பத்துல உள்ளவங்களுக்கு எப்படி இருக்கும். ரொம்ப பயத்தோடவே பார்த்தாங்க,ஆனா சேனலுக்கு கிடைச்ச வரவேற்பு, என் மேல ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்குன்னு தான் சொல்லணும்- கனவுகளை துரத்தும் நடுத்தர வர்க்கத்து இளைஞனின் மனநிலையை யதார்த்தத்தோடு பிரதிபலிக்கிறார் உதவி இயக்குநர் புஹாரி ராஜா. மதுரைக்கார இளைஞர், இஞ்சினியர் , உதவி இயக்குநர், கறிக்கடை நடத்துபவர், யூடியூபர், ஆவணப்பட இயக்குநர் என  வேறு வேறு முகங்களில் பிரதிபலிக்கும் தன்னம்பிக்கை இளைஞர் புஹாரியிடம் பேசினோம்.



 

பள்ளிக்கூடம் படிக்கிற நாட்களிலேயே எனக்கும் கறிக்கடை வேலை பழக்கம் இருக்கு. இஞ்சினியரிங் முடிச்சதும் கேம்பஸ் இண்டர்வியூ ,வெளிநாட்டு வேலைன்னு எல்லாம் கிடைச்சது, ஒவ்வொரு தடவையும் ஆட்கள் குறைப்பு வேலை இல்லைன்னு ஏதாவது பேச்சு வந்தா, எதுவுமே இல்லன்னாலும் கறிக்கடை போட்டு பொழச்சுக்கலாம்னு உள்ள உணர்வு சொல்லும். இது குழப்பமான மனநிலைன்னு சொல்ல முடியாது, நான் எங்க போயி சேரணும்னு ஒரு இலக்கு இருக்கு, படிக்கிற காலத்துல சினிமா ஆர்வம், அதற்கான வழிகள்லயே பயணிக்கலாம்னு வேலைய விட்டுட்டு வந்தேன். ஆனா அத நான் மட்டுமே முடிவு பண்ணமுடியாத சூழல் இருக்கு, இது எனக்கு மட்டுமில்ல, 90 % இளைஞர்களுக்கும் இருக்கிற பிரச்னைதான். இப்போ கறிக்கடையில இருக்கதால, ஆறு மணிநேரம் தான் வேல, முடிச்சு வந்ததும் புடிச்ச சினிமாவ பார்க்குறேன், எதாச்சும் படிக்கிறேன், வருமானத்துல துபாய் அளவுக்கு இல்லைன்னாலும் மன அழுத்தத்துல இருந்து ரொம்பவே விலகி இருக்கதா தான் உணருறேன், பிடிச்ச விஷயங்கள எக்ஸ்ட்ராவா பண்ணுறேன். 



 

கேள்வி: இஞ்சினியர்ல இருந்து விலகி கறிக்கடை இந்த காம்பினேஷனே புதுசா இருக்கே.. தல ?

 

நல்ல சம்பளத்துல வேலை விட்டு வந்தாச்சு, நமக்கு பிடிச்ச வேலை பார்க்கணும்னா அதுல திரும்பவும் பொருளாதாரம் ஒரு பிரச்சனையா வந்துர கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன். அதனால தெரிஞ்ச தொழில் கறிக்கடைல கவனம்  செலுத்தலாம்னு முடிவு பண்ணுனேன். காலையில அஞ்சு மணியில இருந்து 12 மணி வரை கறிக்கடையிலயும் மதியத்துக்கு மேல சேனலுக்கு வீடியோவும் எடுக்க போவேன். 



 

அதான் யூடியூப்லயே அவ்ளோ வருமானம் வருமேன்னு நீங்க கேட்கலாம். நான் எடுத்துருக்க பாதைன்னு பார்த்தா தினம் தினம் நம்மள கடந்து போற எளிய மனிதர்களோட வாழ்வியல தான் பதிவு பண்றேன், எல்லா யுடியூபர் மாதிரி எனக்கும் நம்ம வீடியோ மில்லியன்லாம் போகும்னு ஆசை இருந்தது, ஆனா அந்த அளவுக்கெல்லாம் பார்வையாளர்கள் கிடையாது, ஆனாலும் இந்த வேலையில் கிடைக்கிற மனநிறைவு என்னய தொடர்ந்து இயங்க வச்சுக்கிட்டு இருக்கு" என்றார்.