பேரையூரில் வறட்சி,  படைப்புழு தாக்கத்தால் 35 ஆயிரம் ஏக்கர் மக்காச் சோளம் பாதிப்பு, 25 ஆயிரம் நஷ்ட ஈடு கேட்டு ஆட்சியரிடம் விவசாய சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

 

புது வகை படைப்புழுக்கள்


 

பயிர்களை தாக்கும் பூச்சிகள் சில சமயங்களில் தங்கள் தாயகத்திலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி தாக்குதலை உண்டாக்குவதுண்டு. அவை காற்றின் மூலமாகவோ, விதை தானியம், கன்றுகள் வாயிலாகவோ மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்திய அளவில் மிக முக்கிய மற்றும் அதிகமாக மகசூலை பாதிக்கும் பூச்சியாக உருவெடுத்துள்ளது பால் ஆர்மிவார்ம் என்ற புது வகை படைப்புழுவாகும்.  அமெரிக்காவை தாயமாகக் கொண்ட இந்த பால் ஆர்மிவார்ம் என்ற படைப்புழுவானது முதன்முதலாக அதன் தாயகத்தை தாண்டி ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 2016ஆம் ஆண்டு மக்காச்சோளத்தை தாக்குவது கண்டறியப்பட்டது. தற்போது வரை 44 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி மக்காச்சோளத்தில் மிகுந்த மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வாழ்நாளில் 1500 பூச்சி முட்டைகள்


 

இந்தியாவில் மக்காச்சோளத்தில் இதன் தாக்குதல் கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் கண்டறியப்பட்டு தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்காச்சோளம் மட்டுமின்றி சோளம், நெல், கரும்பு, பருத்தி, சோயா கடலை. கோதுமை, வெங்காயம், முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு, தக்காளி, சிறுதானிய பயிர்கள் உட்பட 80 வகையான பயிர்களை தாக்கி சேதத்தை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது. பெண் அந்து பூச்சியானது இரவு நேரங்களில் 100 முதல் 200 முட்டைகளை குவியலாக இலைகளின் அடிப்புறத்தில் இட்டு அதனை ரோமங்களால் மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும். அந்த பெண் அந்து பூச்சி தன் வாழ்நாளில் சராசரியாக 1500 முட்டைகளை இடும் ஆற்றல் கொண்டது. இப்படி அசுர வளர்ச்சியில் விவசாயத்தை அழித்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவை அடுத்த மோதகம் பிக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 35 ஆயிரம் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

மக்காச் சோளம் பயிர்களை கையில்  ஏந்தியபடி முழக்கம்


 

 போதிய மழைப்பொழிவு இல்லாததாலும் பட்டைப்புழு தாக்குதலாலும் பயிர் பாதிக்கப்பட்டு முழுவதுமாக அழிந்துள்ளது. இதனால் ஒரு ஏக்கர் பயிருக்கு தமிழ்நாடு அரசு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரி  தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். இதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் வெளியில் விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்க புழு தாக்கத்தால் அழிந்த மக்காச் சோளம் பயிர்களை கையில்  ஏந்தியபடி முழக்கங்களையும் எழுப்பினர்.

 

ஏக்கர் 25 ஆயிரம் தான் வேண்டும்


 

பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய தமிழ் விவசாயிகள் சங்க தலைவர், நாராயணசாமி கூறும் பொழுது "தமிழ்நாடு அரசு கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்த நபர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்குகிறது. நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து விவசாயம் செய்தும் மழை இல்லாததால் எங்களது உழைப்பு வீணடிக்கப்பட்டது. எனவே ஒரு ஏக்கர் 25 ஆயிரம் தான் கேட்கிறோம், அதனை அரசு தர முன்வர வேண்டும் நாங்கள் உழைக்க தயாராக இருக்கிறோம்", என கூறினார்.