மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியர் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாலியல் தொல்லை புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆசிரியர் மீது மாணவி புகார்
மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பயின்று வருகிறார். விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூர்த்தி என்பவர் அங்கு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் ஆசிரியர் மூர்த்தி தகாத முறையில் நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லையும் அளித்ததாக அந்தப் மாணவி பரபரப்பு புகார் ஒன்றை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தனது தாய் தந்தை மற்றும் உறவினர்களோடு அளிக்க வந்திருந்தார். அவர் அளித்த புகாரில், ஆசிரியர் மூர்த்தி தான் சொல்வதற்கு இணங்க வேண்டும் எனக்கூறி பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி தெரிவித்தார். மேலும் தன்னிடம் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதோடு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்தார்.
ஆசிரியர் மிரட்டல்
இதனால் பள்ளி மாணவி வேதனை அடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற நிலையில் சக மாணவிகள் அவரை காப்பாற்றியதாகவும், இதனையடுத்து மாணவியின் உடன் இருந்த மற்ற மாணவிகள் அவரது தாயாரிடம் இது குறித்து தெரிவித்த நிலையில், மாணவியின் தாய் மகளிடம் விசாரித்த போது நடந்ததை தெரிந்து கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க வந்ததாக குறிப்பிட்டார். ஆசிரியர் மூர்த்தி ஊரில் உள்ள அனைவரும் உறுதுணையாக இருப்பதாகவும், நல்ல ஆசிரியர் என்ற போர்வையில் இருந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர்கள் வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் புகார் அளிக்கக்கூடாது என பல மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியர் தகவல்
மாணவி புகார் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிவராம பாண்டியனிடம் கேட்ட போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 24 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியராக மூர்த்தி வேலை பார்த்து வந்தார் எனவும், கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்ததாகவும், மாணவி விவகாரம் தற்போது தான் தனக்கு தெரிய வந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தன்னிடம் புகார் எதுவும் சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக பள்ளி மாணவிகளிடம் விசாரித்துள்ளதாகவும் தற்போது ஆசிரியரை பணி செய்ய வேண்டாம் என கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து இருப்பதாகவும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கள்ளர் பள்ளி இணை இயக்குனர் முனியசாமி தகவல்.
பள்ளி மாணவி புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமையாசிரியர் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என கள்ளர் பள்ளிகள் இணை இயக்குநர் முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.