மதுரை விமான நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்...,” மதுரை சித்திரை திருவிழாவை பொருத்தவரை 10 முதல் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டது. இதில் மதுரை மாநகர சுகாதார அலுவலர், மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
15 லட்சம் மக்கள் வரை கூடுகிற இந்த விழாவில் எந்த விதமான தொற்று நோய் பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. திருவிழா நடக்கும் பகுதிகளில் சுமார் 1580 மாநகர பணியாளர்கள் மற்றும் 160 சிறப்பு பணியாளர்கள் மற்றும் அயல் நகராட்சி பணியாளர்கள் 1800 பேர் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். 22 என்கிற எண்ணிக்கையில் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் தூய்மை பணிகளை மேற்பார்வை இடவிருக்கிறார்கள். பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் பொருட்டு 23 சிறப்பு குழுக்கள் அமைத்து குடிநீரில் குளோரின் அளவு சரிபார்க்கப்படும் பணியினை உறுதி செய்யவிருக்கிறார்கள்.
கோடை மழையும் பொழிந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்கள், புழுக்களை நீக்குவதற்கு ஏதுவாக திருவிழா நடைபெறும் ஏறத்தாழ 20 நாட்களுக்கு முன் பயண திட்டம் வகுத்து பத்து குழுக்கள் அமைக்கப்பட்டு திருவிழா நடக்கும் இடம் பொதுமக்கள் கூடும் இடங்களில் புகை மருந்து அடித்தல், கொசு மருந்து அடித்தல் போன்ற பல்வேறு பணிகளில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் திருவிழா காலங்களில் ஆங்காங்கே சேரும் திடக்கழிவுகளில் ஈ தொல்லைகள் ஒழிக்கும் வகையில் மாநகராட்சி அதற்கான பணிகளை செய்து வருகிறது.
மக்கள் அதிகமாக கூடுவதால் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் பொது சுகாதாரக் கோட்பாடுகளின்படி சுகாதாரமாக உள்ளதா என துப்புரவு ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள். திருவிழா காலங்களில் உணவகங்கள் அன்னதானம் செய்யும் இடங்கள், குளிர்பானம் தயாரிக்கும் இடங்கள் மற்றும் பழம் விற்பனை செய்யும் இடம் என ஏழு சிறப்பு குழுக்கள் அமைத்து உணவு பாதுகாப்பு துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு மாநகராட்சி பொது சுகாதாரத்துறை 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவிருக்கிறது. 168 மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். கடந்தாண்டு 20 முகாம்களே நடைபெற்றது தற்போது 56 இடங்களில் முகாம்கள் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆங்காங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் 32 இடங்களில் ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட உள்ளது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளில் கள்ளழகரை ஒட்டி ஒரு 108 ஆம்புலன்ஸ் பயணிக்க உள்ளது. பல பணிகளை பொது சுகாதாரத்துறை இன்று மாநகராட்சி நிர்வாகத்தோடு சேர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அதேபோல் மக்கள் நல்வாழ்வு துறையைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இங்கு பல்வேறு வகைகளில் மண்டகப்படிகளில் அன்னதானம் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், சர்பத் குளிர்பானங்கள் ஆகியவை சுத்தமானதாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் செயற்கை சாயங்கள் ஏதும் கலக்கப்பட்டுள்ளதா என ஆராயும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாலத்தின் பை மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடைகாலம் என்பதால் இங்கு அமைக்கப்படும் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள் ஆகியவற்றில் தரமான குடிநீர் செயற்கை சாயங்கள் அற்ற உணவுகளை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் . திருவிழாவின்போது மண்டகப்படிகளில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குபவர்கள் இணையதளத்தில் மூலம் விண்ணப்பங்கள் பெற்று மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று மட்டுமே உணவகங்கள், குளிர்பான கடைகள் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அந்த புகார்களுக்கு ஒரு வாட்ஸ்அப் அறிவிக்கப்பட்டிருக்கிறது உணவுப் பொருட்கள் குளிர்பானங்களில் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் நேரடியாக 9444042322 என்கிற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக ஆங்காங்கே விளம்பர பலகைகள் வைக்க அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்