வேடசந்தூர் அருகே கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, போதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி குஜிலியம்பாறை ஒன்றியத்துக்குட்பட்ட தங்கம்மாபட்டி, புங்கம்பாடி, குறிக்கோடாங்கிபட்டி, சின்னழகு நாயக்கனூர், பில்லக்காபட்டி என 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது காந்திராஜன் சின்னழகு நாயக்கனூர் ஆதி திராவிடர் காலணியில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்குள்ள பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.




அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் பேச தொடங்கியபோது அங்கிருந்த போதை ஆசாமி ஒருவர் அந்த அம்மா எங்க, இதுவரைக்கும் அந்த அம்மா (கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சிட்டிங் எம்.பி) வந்திருக்காங்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் இருங்க நான் பேசிட்டு வந்து உங்களுக்கு பதில் சொல்றேன் என்று கூறி பேசத் தொடங்கினார். தொடர்ந்து காந்திராஜன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த போதை ஆசாமி இப்படியே ஏமாத்திட்டே போகாதீங்க உங்களுக்காக எவ்வளவு பாடுபட்டோம் என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.




அதற்கு காந்திராஜன் இருப்பா நான் பேசி முடிச்சுட்டு உனக்கு இந்த இடத்திலே பதில் சொல்றேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய காந்திராஜன் காங்கிரஸ் சின்னம் கைச்சின்னம் ஜோதிமணி நிக்குது நீங்க ஓட்டு போடுங்க என்று பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் குறிக்கிட்ட போதை ஆசாமி நீங்க ஜெயிக்கிறீங்க சத்தியமா சொல்றேன் நீங்க தான் ஜெயிக்கிறீங்க வேற எதுவும் சொல்லாத என்று கூறினார். மீண்டும் காந்திராஜன் பேசத் தொடங்கிய போது உன்னைய ஜெயிக்க வச்சோமுல்ல என்று மீண்டும் காந்தி ராஜன் பேசும்போது போதை ஆசாமி குறுக்கே பேசினார். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அந்த போதை ஆசாமியை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் விடுங்க நம்ம ஆளு தான் நமக்கு தெரிஞ்சவர் தான் என்று கூறினார்.




பின்னர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜனை பேசவிடாமல் போதை ஆசாமி ரகலையில் ஈடுபட்டார். அப்போது இப்போ எனக்கு டைம் ஆகுது நான் பேசிட்டு போயிடுறேன்  என்று கூறி சட்டமன்ற உறுப்பினர் பேச தொடங்கியபோது மீண்டும் போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரை பேசவிடாமல் எனக்கு 11 வருஷம் கழித்து பிள்ளை பிறந்துச்சு அந்த ரெண்டு பிள்ளைங்களுக்கு, நீ தான் ஜெயிக்கிற என்று கூறிய போது அங்கு இருந்த ஒன்றிய பெருந்தலைவர் சீனிவாசன் என்பவர் எதுக்கு அவ்ளோ வருஷம் லேட் பண்ணுன என்று நகைச்சுவையாக பேசி சூழ்நிலையை திசை திருப்பி அந்த போதை ஆசாமி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.