மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் 2ஆம் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
மக்களவைத் தேர்தல்:
மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக களம் காண்கின்றன. இதில் திமுக கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா 1 இடங்களும் ஒதுக்கி தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது.
இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவுக்கு தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதில் தேமுதிகவுக்கு 5 இடங்களும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழக கட்சிக்கு 2 இடங்களும் அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது. 33 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. நேற்று 16 இடங்களுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
பி.ஜே.பி., மதவாத கட்சி
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர். சரவனணுடன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை கோரிப்பாளையம் பகுதியில் சந்தித்தார். அப்போது, "பாரதிய ஜனதா கட்சியை விட ஆபத்தான கட்சி அ.தி.மு.க., என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை ஜெயிக்க வைத்தது அ.தி.மு.க., தான்.
பாலகிருஷ்ணன் நல்ல மன நிலையில் சொன்னாரா? இல்லை அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதா என தெரியவில்லை!. தோல்வி பயத்தில் இப்படி பேசி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாத கட்சி. அதைவிட நாங்கள் ஆபத்தானவர்கள் என சொல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தி.மு.க., தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளது
பாமக உள்ளிட்ட கட்சியினர் பாஜக கூட்டணிக்கு போவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. இறுதியில் மக்கள் தான் எஜமானர்கள். தி.மு.க., அரசும், பா.ஜ.க., அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளது. மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்களோ? தி.மு.க., எம்.பி.க்கள் ஐந்தாண்டுகளாக எதுவும் செய்யவில்லை. இதே போலத்தான் கேஸ் விலையை குறைப்பேன் என மோடியும் சொன்னார், வீட்டுக்கு 15 லட்சம் தருவேன் என்றார். எதையும் செய்யவில்லை" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kajal Pasupathi: ஆபாச கமெண்ட்.. அதே ஸ்டைலில் பதிலடி.. உக்கிர காளியாக மாறிய காஜல் பசுபதி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Lok Sabha Election 2024: அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - யாருக்கெல்லாம் இடம்?