சமூக வலைதளங்களில் நடிகைகளின் பக்கத்தில் ஒரிஜினல் ஐடிக்களிலேயே வந்து எந்தவித அச்ச உணர்வுமின்றி, அற உணர்வுமின்றி ஆபாச கமெண்டுகளை அள்ளித் தெளிப்பது என்பது, இன்றைய இணைய உலகில் வாடிக்கையாகிவிட்டது. அப்படி தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆபாச கமெண்ட் பகிர்ந்தவரை கெட்ட வார்த்தையில் சாடி காஜல் பசுபதி பதிவிட்டுள்ளார்.


காஜல் பசுபதி


சன் மியூசிக் தொலைக்காட்சியில் 2000களின் மத்தியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரை நடிகை, நடன நிகழ்ச்சி போட்டியாளர், வெள்ளித்திரை என படிப்படியாக வளர்ந்தவர் காஜல் பசுபதி. இவரும் கோலிவுட் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டருமான சாண்டி மாஸ்டருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வெகு சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர்.


தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து சாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் காஜல் தொடர்ந்து நட்புறவைக் கொண்டு பொதுத் தளங்களிலும் அன்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். 


ஆபாச கமெண்டுக்கு கெட்ட வார்த்தையில் பதில்


மேலும் சமூக வலைதளங்களில் சமரசமின்றி அதிரடி கருத்துகளைத் தெரிவித்து படு ஆக்டிவாக வலம் வரும் காஜல் பசுபதிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தன் சமூக வலைதள பக்கத்தில் தன்னைப் பற்றி ஆபாச கமெண்ட் பதிவிட்டவருக்கு காஜல் அதிரடியாக அவரது மொழியிலேயே ரிப்ளை செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


தன் சமூக வலைதளப் பக்கத்தில் பாலியல் வன்புணர்வு செய்வதைத் தூண்டும் வகையில் ஆபாச கமெண்ட் செய்த அந்நபரின் ஸ்க்ரீன் ஷாட் பகிர்ந்துள்ள காஜல், கெட்ட வார்த்தையில் பதில் அளித்துள்ளதுடன் அவரது மொழியிலேயே சாடியுள்ளார். இந்நிலையில், காஜல் சிறப்பான ரிப்ளை கொடுத்துள்ளார் எனப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்தப் பதிவின் கமெண்ட் செக்‌ஷனிலும் சிலர் ஆபாச கமெண்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்நபர்களுக்கும் அவர்களது பாணியிலேயே கமெண்டுகளில் காஜல் ரிப்ளை செய்து வருகிறார்.


மற்றொருபுறம் கெட்ட வார்த்தைகள் இடம்பெறும் பாடலுடன் தான் சிகரெட் பிடிக்கும் வீடியோவையும் காஜல் பகிர்ந்துள்ள நிலையில், “ஆபாச கமெண்டுக்கு இப்படி பதில் சொல்வது தீர்வல்ல, காஜல் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






சினிமா பயணம்


வசூல் ராஜா எம்.பி,பி.எஸ் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்கள் தொடங்கி, முக்கியக் கதாபாத்திரங்கள் வரை நடித்துள்ள காஜல், 
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இடையே கலந்து கொண்டார். இறுதியாக தமிழில் கலகலப்பு 2 திரைப்படத்தில் தோன்றினார்.


முன்னதாக தன்னுடைய பழைய திருமண புகைப்படத்தைப் பகிர்ந்து தனக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று முடிந்ததாக காஜல் பசுபதி இணையத்தில் ப்ராங்க் (Prank) செய்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.