நகைக்காக 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

 

தேனி மாவட்டம் தேவாரம் மூனாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவரது மகள் நவநீதப்பிரியா. அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3.9.2007-ல் நவநீதப் பிரியா, அவரது அண்ணன் நவீன்குமாருடன் பள்ளிக்குச் சென்றார். மாலையில் நவீன்குமார் மட்டும் வீடு திரும்பினார். நவநீதப் பிரியா வீடு திரும்பவில்லை. மறுநாள் தண்ணீர் தொட்டியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

 

சிறுமியைக் கொலை செய்து நகைகளைத் திருடியதாக அதே ஊரைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற சுந்தர பாண்டியம்மாளை தேவாரம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் பாண்டியம்மாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 21.7.2010-ல் தீர்ப்பளித்தது. இதை ரத்து செய்யக் கோரி பாண்டியம்மாள், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, "இறந்த சிறுமியின் சீருடைகள் மனுதாரரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர். ஆனால், இறந்த உடலில் சீருடை இருப்பது புகைப்படத்தில் தெரிகிறது. சிறுமி அணிந்திருந்த நகைகள் மனுதாரர் வீட்டில் மீட்கப்பட வில்லை. சிறுமி சடலமாக கிடந்த தண்ணீர் தொட்டி அருகே ஊர் மக்கள் குளிப்பது வழக்கம். இதனால் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது மனுதாரர் குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்ததை வைத்து, அவர் தான் கொலை செய்தார் என்ற முடிவுக்கு வர முடியாது. இவ்வாறு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது" என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 



 







மற்றொரு வழக்கு

 

குடும்ப வன்முறை தடுப்பு சட்ட வழக்குககளை குற்றவியல் வழக்காகவே விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.

 

குடும்ப வன்முறை தடுப்பு சட்டப் பிரிவு வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக கருதப்பட்டு குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளை உரிமையியல் வழக்குகளாக கருத வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஒருவர் உத்தரவிட்டார். மற்றொரு தனி நீதிபதி குற்றவியல் வழக்குகளாக கருத வேண்டும் என உத்தரவிட்டார். பல மாநில உயர் நீதிமன்றங்கள், குடும்ப வன்முறை தடுப்பு சட்ட வழக்குகளை குற்றவியல் வழக்காக கருத வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குற்றவியல் வழக்கா, உரிமையியல் வழக்கா என்பதனை முடிவு செய்ய வழக்கு விசாரணை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி குடும்ப வன்முறை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உயர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கலாகும் வழக்குகளை குற்றவியல் வழக்காகவே விசாரிக்க வேண்டும், குடும்ப வன்முறை புகார் அளிக்க கால வரம்பு இல்லை. கீழமை நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிமன்றம் அல்லது உரிமையியல் நீதிமன்றம் அல்லது நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரிக்க வேண்டுமா என்பதை பாதிக்கப்பட்டவர் முடிவு செய்து கொள்ளலாம். இந்த உத்தரவின் அடிப்படையில் குடும்ப வன்முறை தடுப்பு சட்ட வழக்குகளை சம்பந்தப்பட்ட தனி நீதிபதி முன்பு பதிவுத்துறை பட்டியலிட வேண்டும்"  என உத்தரவில் கூறியுள்ளனர்.