தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது.

Continues below advertisement

இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும், கும்பக்கரை அருவியில் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மூலிகைச் செடிகள் நடுவில் கடந்து வரும் நீரில் குளிப்பதால் பல்வேறு நோய்களில் மீண்டு வர உதவுவதாக கூறுகின்றனர்.

Continues below advertisement

மேலும்  கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது கடும் குளிர்ந்த நிலையில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இயற்கை சூழலில் பசுமை நிறைந்த அடர்ந்த வனப் பகுதிகளுக்கு நடுவில் இந்த அருவி அமைந்துள்ளதால் கும்பக்கரை வனப்பகுதியில் விலங்கினங்கள், காட்டுமாடு, சிறுத்தை அரிய வகை குரங்கினங்கள், மான், புள்ளி மான், மிளா மான் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களும் உள்ளன.

இதுபோன்ற சூழலில், நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்து, வறண்டு காணப்பட்டது. எனவே, கடந்த மே மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

குறிப்பாக கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் பரவலாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால், 29 நாட்களுக்குப் பிறகு, இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவியைப் பார்வையிடவும் விதித்திருந்த தடையை தேவதானப்பட்டி வனத்துறையினர் நீக்கியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.