திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மேல்மலை கிராமப் பகுதியில் போதை காளான், கஞ்சா போன்றவைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கூக்கால் மலை கிராமப் பகுதியில் போலி ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அந்த ஆசிரமத்திற்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து அவர்களுக்கு போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகவும் இந்த போலி ஆசிரமத்தை நடத்தும் போலி சாமியார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கூக்கால் மலை கிராம பகுதியில் அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது ஆசிரமத்திற்கு உள்ளே போதை காளான் மற்றும் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்ய இந்த ஆசிரமத்திற்கு வந்துள்ள தகவல் தெரிந்ததை அடுத்து இங்கு தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சோதனை செய்த காவல் துறையினர் அங்கிருந்த போதைக் காளான் மற்றும் கஞ்சாவை சுற்றுலா பயணிகளை குறி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. போதை காளான் மற்றும் கஞ்சாவை வைத்து ஆசிரமம் என்ற பெயரில் விற்பனை செய்து வந்த போலிச் சாமியார் தன்ராஜ் 34 என்பவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர்.
காவல் துறையினர் விசாரணையில் உசிலம்பட்டி வடகாடு பட்டியைச் சேர்ந்த தன்ராஜ் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மலைப்பகுதியில் நிலம் வாங்கி அங்கு அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தை நடத்தி வந்ததும், தன்ராஜ் பி.இ பட்டதாரி என்றும் விசாரணையில் தெரியவந்தது. இவரும் போலிச் சாமியார் வேடம் அணிந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா , போதைக் காளான் விற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணிகளை குறிவைத்து போலி ஆசிரமம் நடத்தி, போதை காளான் மற்றும் கஞ்சா விற்ற போலி சாமியாரான தன்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதை காளான் மற்றும் கஞ்சாவை கைப்பற்றினார்கள்.
இது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடைக்கானல் மேல்மலை பகுதியான கூக்கால் மலைப்பகுதியில் போதை காளான் அதிக அளவில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. போதை காளான் உட்கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் இந்த கிராமப் பகுதியில் அளவில் தங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று முன்தினம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதை காளானை கைப்பற்றி விசாரித்து வருகின்றார்கள். தொடர்ந்து மேல் மலை பகுதி பூண்டி , கூக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது பெயரளவிற்கு சோதனை இடாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது