தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும். வரும் 11-ந் தேதி( நாளை மறுநாள்) கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் கனமழை 11-ந் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த 10 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் மழை குறைந்திருந்த நிலையில், இரவு 11 மணி முதல் விடிய, விடிய கன மழை பெய்தது நேற்று மதியம் 12 மணி வரை மழை நீடித்தது. அதன்பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. தொடர்மழை எதிரொலியாக மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் மின்சார வயர்கள் ஆங்காங்கே அறுந்து விழுந்தன. இதனால் பல்வேறு கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில்காடு என்ற கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்ப்பதால் அப்பகுதியில் செல்லும் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மலைக்கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராம மக்கள் ஆபத்தை உணராமல், பெருக்கெடுத்து ஓடுகிற காட்டாற்று வெள்ளத்தை கடந்து வருகின்றனர். காட்டாற்றின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தில் ஏறிச்சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை மலைக்கிராம மக்கள் வாங்கி செல்கின்றனர். பெண்கள் சிலர் ஒருவரையொருவர் கையை பிடித்த படி காட்டாற்று வெள்ளத்தை கடக்கின்றனர். இதனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மூங்கில்காடு கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக, நேற்று பகலில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்