கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அவசியம் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



 

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் ஏரியில் படகுசவாரி செய்ய 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பது அவசியம். 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என சான்றிதழ்களை சரி பார்த்த பிறகே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் உள்ளதா எனத் தெரிவிக்கப்பட வில்லை.



 

கொடைக்கானலில் வழக்கமாக வாரச்சந்தை ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும். அரசு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவித்துள்ளதால், இன்று வாரச்சந்தை நடக்கும் என கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து 50 சதவீத கடைகளோடு சந்தை இயங்க உள்ளதாகவும், சந்தைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 






திண்டுக்கல்லில் திங்கட்கிழமை நடைபெறும் குறைத்தீர் கூட்டம் ஒத்திவைப்பு 


 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமான மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

 



 

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும்  வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைப்பெறும் “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்”  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே வரும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் “மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்” நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.