காதலர் தினத்தை கொண்டாட சர்வதேச சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காதல் ஜோடிகள் குவிந்துள்ளனர். இதனிடையே கொடைக்கானலுக்கு வருகைபுரிந்த காதலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அங்கு நிலவிய இதமான சீதோஷ்ணநிலை மாலையிட்டு வரவேற்பது போல் இருந்தது. மாலை நேரத்தில் மேக மூட்டங்கள் தரை இறங்கியதை அவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்து புகைப்படங்கள் எடுத்தனர்.
அத்துடன் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் பூத்துக்குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக பூங்காக்களில் இளம்ஜோடிகளின் வருகை அதிகம் இருந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், கொடைக்கானலில் பிரகாசபுரம், குண்டுப்பட்டி, கவுஞ்சி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பசுமை குடில்கள் அமைத்து உயர்ரக கொய்மலர்களான காரனேசன், ஜெர்பரா மற்றும் பல்வேறு வண்ண ரோஜாக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கொய்மலர்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் காதலர்களை கவரும் விதமாக காதலர்களின் சின்னமாக இருக்கும் தாஜ்மஹால் பூக்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பூங்காவில் பூத்த ஹைட்ரேஞ்சிய எனப்படும் வெள்ளை நிற பூக்களை வைத்து தாஜ்மஹால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவத்தின் முன்பு சுற்றுலாப் பயணிகள் மற்றும் காதலர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தும் வருகின்றனர். இரண்டு நாட்கள் இந்த வடிவம் பொருத்தப்பட்டு இருக்கும் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர் .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்