திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் குணா என்ற குணால் 24. இவர் தனது உறவினர்கள் உடன் வெளியூரில் பைனான்ஸ் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த விஜயராஜ் இவருடைய மகள் தாமரைச்செல்வி என்பவர் குணாலை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் குணால் தாமரைச்செல்வியின் காதலை ஏற்க மறுத்ததாகவும் இதனால் மனமுடைந்த தாமரைச்செல்வி கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மகள் இறந்த துக்கத்தில் விஜயராஜனும் இறந்ததாக கூறப்படுகிறது. தனது குடும்பத்தின் நிர்கதிக்கு காரணம் குணால் என்று நினைத்த விஜயராஜன் மகன் தர்ம மந்திரி 23, என்பவர் பழி வாங்கும் நோக்கத்துடன் இதே பகுதியில் இருந்துள்ளார். தனது குடும்பத்தில் தங்கை தாமரைச்செல்வி இறப்பிற்கும் தனது தந்தை விஜயராஜன் இறப்பிற்கும் குணால்தான் காரணம் என்று முன்விரோதம் கொண்டு இவரை எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று தர்ம மந்திரி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
பூம்பாறை பகுதியிலேயே வேலை செய்து வந்த தர்ம மந்திரி இதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் காளி என்பவர் உடன் பூம்பாறை கோவில் திருவிழா முடிந்தவுடன் குணாலை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
இதை அடுத்து நேற்று இரவு தனது நண்பர்களுடன் நடந்து சென்ற குணாலை வழிமறித்த தர்ம மந்திரியும் இவரது நண்பர் காளியும் தகராறு செய்துள்ளனர். அப்போது தர்ம மந்திரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணாலை பல இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த குணால் சம்பவ இடத்திலேயே பலியானார். குணாலை குத்தி விட்டு தர்ம மந்திரியும் இவரது நண்பர் காளியும் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி இறந்த குணாலின் தந்தை தியாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திக் கொன்றவர்களை தேடினர். தோட்டத்துப் பகுதியில் மறைந்திருந்ததாக தகவல் கிடைத்தது அடுத்து குணாலை குத்திக் கொன்ற தர்ம மந்திரி மற்றும் இவரது நண்பர் காளி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் தர்ம மந்திரி கூறியதாவது... கடந்த ஓராண்டிற்கு முன்பு தனது தங்கை தாமரைச்செல்வி குணாலை காதலித்தார். தாமரைச்செல்வியின் காதலை குணால் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த தனது தங்கை விஷம் குடித்து இறந்ததாகவும், தனது தந்தை இந்த சோகத்தில் இறந்ததாகவும் தனது குடும்பமே நிர்மூலமானதற்கு குணால்தான் காரணம் என்ற காரணத்தினால் கடந்த ஓராண்டாக பழிவாங்க துடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.