சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் சுத்தத்தை பற்றி பேசும் மக்கள் தெருவில் குப்பைகளை போட யோசிப்பதில்லை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.


 

கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் மையத்தை நிரந்தமாக மூடவோ, வேறு இடத்திற்கு மாற்றவோ கோரி வழக்கு தொடரப்பட்டது. ஜட்கா எனும் நிறுவனத்தின் சார்பில் அங்கு பணியாற்றும் அவிஜித் மைக்கேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், "கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் 3.77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் கொடைக்கானல் பகுதி கழிவுகள் கொட்டப்படுகின்றன. காய்கறி சந்தை கழிவுகள், கண்ணாடி, பிளாஸ்டிக், காதிதம், உணவுக்கழிவுகள் என எவையும் பிரிக்கப்படாமல் ஒட்டுமொத்தமாக இங்கு குவிக்கப்படுகின்றன. இந்த பகுதியிலிருந்து கழிவுகள் பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதியான டைகர் சோலை பகுதிக்குள் செல்லாத வண்ணம் அமைக்கப்பட்டிருந்த சுவரும் 2018ல் சிதிலமடைந்த நிலையில், தற்போது அங்கு கொட்டப்படும் டன் கணக்கிலான கழிவுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்லும் நிலை உள்ளது. இதனால் டைகர் சோலை மற்றும் பெருமாள் மலை பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.

 



 

ஆகவே, "கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் மையத்தை நிரந்தமாக மூடவோ, வேறு இடத்திற்கு மாற்றவோ உத்தரவிட வேண்டும். அதுவரை அதனை முறைப்படுத்த நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "கொடைக்கானலிற்கு செல்லும் பயணிகள் மது, பிளாஸ்டிக் வீசிச் செல்கின்றனர். எப்படி அப்பகுதி மக்களை குற்றம் சாட்ட முடியும்? என கேள்வி எழுப்பினர். மேலும் " மற்ற மனிதனைப் பற்றிய அக்கறை இன்மையும், அதீத பேராசையும் நிறைந்து இருந்தால், நீதிமன்றம் எதையும் ஒரே நாளில் மாற்ற முடியாது. சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் சுத்தத்தை பற்றி பேசும் மக்கள் தெருவில் குப்பைகளை போட யோசிப்பதில்லை. வழக்கு தொடர்பாக மத்திய, மாநில வனத்துறை செயலர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 

 



22 கிலோ கஞ்சா கடத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை!

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள எம்.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் ராதா(48). கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் நாள் தேனி பழைய ரயில் நிலையம் அருகே 22 கிலோ கஞ்சா வைத்திருந்தபோது தேனி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அதன்படி இன்று நீதிபதி ஹரிஹரகுமார் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் ராதா மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டதால் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ராதாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

இதேபோன்று இந்த வழக்கு விசாரணையின் போது, முறையாக சாட்சியம் அளிக்காத அப்போதைய ஆய்வாளர், ராஜேஷ் கண்ணா, சார்பு ஆய்வாளர் ஜெயபாலன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.