கொடைக்கானல்  ப‌ண்ணைக்காடு, தாண்டிக்குடி செல்லும் பிர‌தான‌சாலைகளில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து விரட்டுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர் , காட்டு யானையை வ‌ன‌ப்ப‌குதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான கோம்பை, பள்ளங்கி, பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சு வீடு, பண்ணைக்காடு,  தாண்டிக்குடி உள்ளிட்ட மலை கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு  வாழை, பலா, பீன்ஸ், உருளை கிழங்கு, அவகோடா உள்ளிட்டவை முக்கிய பயிர்களாக விவசாயம் செய்யப்படுகிறது.



இந்த கிராமபுறங்கள் அனைத்தும் பழனி தேக்கந்தோட்டம் பகுதியின் மலையடிவார பகுதியாக இருப்பதால்,இப்பகுதியை ஒட்டியுள்ள வன பகுதியின் வழியாக கொடைக்கானல் பகுதியில் ஊருக்குள் காட்டு யானை அடிக்கடி வருகிறது. மேலும் இந்த மலை கிராமங்களில் விளைவிக்கப்படும் பயிர்களை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களையும், விளை பயிர்களையும் சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது என  இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


மேலும் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் வந்து பொதுசொத்துக்களை சேதப்படுத்துவதுடன் அவ்வப்போது உயிர்பலியும் ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானை தாக்கியதில் கடந்த 2 வருடத்திற்குள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் , குறிப்பாக கொடைக்கனாலுக்குச் செல்ல மலை வழிமார்க்கமாக செல்லும் சூழ் நிலையில் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டுயானை மலைவழிச்சாலையாக  செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறிப்பதும், அச்சுறுத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.



கொரோனா ஊரடங்கால் மலை வழிச்சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்துள்ள நிலையில்  ப‌ண்ணைக்காடு, தாண்டிக்குடி  பிர‌தான‌ மலைவழிச்சாலையில்  வரும்  வாக‌ன‌ங்க‌ளை ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறித்து விரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மலை வழிச்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். அதே போல கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டுயானை கொடைக்கானல் மலை கிராம புற பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கும் வன விலங்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்க எடுக்க வேண்டுமென்ற கோரிக்கயும் எழுந்துள்ளது. மேலும் கொடைக்கானல் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும் அதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள்  புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்