கொடைக்கானலில் 62- வது மலர் கண்காட்சி  மற்றும் கோடைவிழாவனது மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் கோடைவிழானது  ஒன்பது நாட்கள் நடைபெறும் என்று திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.

கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம்.  கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. 

கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறையை கொண்டாடுவதற்கு கொடைக்கானலுக்கு பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வருடம் தோறும் பிரைன் பூங்காவில் மலர்ககண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று  62 -வது மலர் கண்காட்சி காண முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் கொடைக்கானல் வந்த நிலையில், கொடைக்கானல் அமைந்துள்ள ரோஜா கார்டன் மற்றும் பிரையண்ட் பூங்காவை பார்வையிட்ட தோட்டக்கலை மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது, 62 -ஆவது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழாவானது மே 24 -ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் என்று கூறினார் .

இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் படகு போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறினார்.  மேலும் இந்நிகழ்ச்சியில்  அமைச்சர்களான ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். அதேபோல் கொடைக்கானலில் பெப்பர் அருவி ஆனது புதிய சுற்றுலாத்தலமாக  அரசு கட்டுப்பாட்டுடன்  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 5 மேற்பட்ட அருவிகள் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.