ஊரடங்கு கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் பரவும் இரண்டாம் கட்ட அலை எதிரொலி , தொடரும் வேலை இழப்பு , அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லை என கேரள தோட்டத் தொழிலாளர்கள் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 



தமிழக-கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தேனி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே இருந்து வருகிறது. அது போக  தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ளதால் பல்வேறு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களும் நடந்து வருகிறது. போடி, கம்பம் ,தேவாரம் ,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் கேரளாவில் உள்ள ஏல தோட்ட வேலைகளுக்காக தமிழகத்திலிருந்து கம்பமெட்டு , குமுளி மற்றும் போடி மெட்டு வழியாக ஜீப்புகளில் சென்று வருகின்றனர். இன்னிலையில் கடந்த ஆண்டின் கொரோனா பாதிப்பிலிருந்து மீளமுடியாத நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அலையாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக தமிழக கேரள எல்லைகளில் இரு மாநில போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்கு இரு மாநில அரசுகளும் முழு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆதலால் இப்பகுதியில் இருந்து அதாவது தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது தினசரி அத்தியாவசிய தேவைகளுக்கு போதிய வருமானமின்றி சிரமப்படுவதாகவும் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க தோட்ட வேலைகளுக்கு சென்று திரும்பி வந்தால் மட்டுமே தினசரி ஊதியம் என்ற நிலையில் இப்பகுதியில் உள்ள பெண்கள் தங்களது குடும்ப நிலைக்காக மகளிர் குழுக்கள் வங்கிகள் போன்ற நிறுவனங்களில் கடனுதவி பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் தற்போது மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு கடுமையாக தொந்தரவு செய்வதாக புகார் தெரிவித்தும் வேதனை அடைந்துள்ளனர்.



தமிழக அரசு மகளிர் குழுக்கள் வங்கிகள் போன்ற நிறுவனங்களில்  மாதச் சந்தா கட்டுவதற்கு கூடுதல் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் மகளிர் குழு மற்றும் இதர வங்கி நிறுவனங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தினசரி ஊதியம் கிடைத்தால் மட்டுமே தங்களுக்கு வாழ்வாதாரம் என இருக்கும் குடும்பங்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தோட்டத் தொழிலாளர்கள் சொல்ல முடியாத அளவிற்கு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இது மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குழந்தைகளுடன் உணவுக்கு சிரமப்படுகின்றனர். வெளிமாநில பணி என்பதால், இங்கு அவர்களுக்கு உதவ ஆளில்லை. மாற்று வேலையும் தேட முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.