மயானப்பணியில் ஈடுபட்டதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம், 15 ஆண்டுகளுக்கு மேலாக  மயானத்திலேயே வசித்து வரும் அதிர்ச்சி தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வருகிறது. 



தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் பல்வேறு குடியிருப்புகள் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் . தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள ஒரு நகரமாகவும் உள்ளது. இந்த  ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள மயானத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தனது இரு மகன்களுடன் குடியிருந்து வருகின்றனர் கருப்பையா-முருகேஸ்வரி தம்பதி. மின் மயானத்தில் பிணம் எரிப்பு வேலையில் ஈடுபட்டதால்   தனது குடும்பத்தை தனது உற்றாரும் உறவினரும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக  வேதனையுடன் தெரிவிக்கிறார் முருகேஸ்வரி.



  சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சலவைத்தொழில் மட்டுமே செய்து வந்த தனது கனவர் எதிர்பாராத விதமாக வறுமையின் காரணமாக பிணம் எரிக்கும் வேலை செய்ததாகவும் அன்று முதல் தற்போது வரை அதுவே தொழிலாகவும் மாறியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 



முன்பு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள சலவைத் தொழிலாளர் சம்பந்தப்பட்ட ஒரு வளாகத்தில் குடிசை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர் . சலவை தொழில் செய்வது மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகவும் வருமானமாகவும் இருந்து வந்த நிலையில்,  எதிர்பாராத விதமாக மாற்று பணியில் ஈடுபட்ட போது அதை ஏற்க மறுத்த உறவினர்கள், ‛ பிணம் எரிப்பவர்களுக்கு இங்கு இடமில்லை,’ என அங்கிருந்து காலி செய்ய கூறியுள்ளனர். அன்று முதல் தற்போது வரை கேட்பாரின்றி மயான வளாகத்தில் இருக்கும் ஒரு சிறிய அறையில் குடியிருந்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவிக்கிறார் முருகேஸ்வரி 



தொழில் செய்வதில் இவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் தொழில் செய்வதால் பிரச்னையை சந்திக்கின்றனர். இன்று வரை எந்த நிகழ்ச்சிகளுக்கும் இவர்களை அழைப்பதில்லை. சேர்ப்பதில்லை. மயானமும், சடலமுமாய் 15 ஆண்டுகளை கடத்தி விட்டார்கள். இன்னும் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பின் இவர்கள் குழந்தைகளுக்கும் இதே நிலை ஏற்படுமோ என்கிற அச்சம் தான் இவர்களின் பெரிய கவலை. கைக்குழந்தையுடன் மின் மயான வளாகத்தில் ஒரு சிறிய அறையில் குடியிருந்து வரும் இந்த தம்பதியினரின் மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதில் கணவன், மனைவி இருவரும் மாறி மாறி இந்த மயானத்தில் சடலங்களை எரித்து அதிலிருந்து கிடைக்கும் ஊதியத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். குடியிருக்க வீடு கேட்டு பல ஆண்டுகளாக மன்றாடும் இவர்களின் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனிதர்கள் உதவாத நிலையில் சடலங்கள் உதவுவதால், இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்த தம்பதி.