கேரள மாநிலம் அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி வனம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்தவையாக திகழ்கிறது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் அங்கு இருப்பதால் கடவுளின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டுமன்றி சட்டவிரோத போதை மருந்தாக இருக்கும் எம்.டி.எம்.ஏ. பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் கடத்தல்காரர்களிடம் கோடிக்கணக்கில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் சிக்குவதே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். போதைப் பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் ரூ. 3 கோடி மதிப்புள்ள உயர் ரக கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தலைமறைவான சென்னையை சேர்ந்த முக்கிய புள்ளியை கலால் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலால் துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 3 கோடி மதிப்பு உயர் ரக கலப்பின கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் வசித்து வரும் தஸ்லிமா சுல்தான் (41), அவரது கூட்டாளியான ஆலப்புழாவை சேர்ந்த பிரோஸ் (26) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தஸ்லிமாவுக்கு ஷைன் டோம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி உள்பட சில மலையாள நடிகர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நடிகர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளார். அழகிகளையும் அனுப்பி வைத்துள்ளார். தஸ்லிமாவின் கணவரான சுல்தான் சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர். இவர் சென்னையில் உள்ள செல்போன் கடைகளுக்கு மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட செல்போன்களை வாங்கி வந்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
அப்போது அங்கிருந்து உயர் ரக கஞ்சா உள்பட போதைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்தியாவுக்கு போதைப் பொருள் கடத்தும் கும்பலில் முக்கிய புள்ளியாக சுல்தான் செயல்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து கேரள கலால்துறையினர் சுல்தானுக்கு வலை விரித்தனர். தீவிர விசாரணையில் நேற்று முன்தினம் தமிழக-ஆந்திர எல்லையில் வைத்து அவரை கைது செய்தனர். விசாரணைக்காக அவரை கலால் துறையினர் ஆலப்புழாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் போதைப்பொருள் கடத்தல் குறித்து மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.