பயணம், புதிய இடங்களுக்குச் செல்வது மற்றும் உலகின் அழகான  இடங்களைப் பார்ப்பது பெரும்பாலும் மக்களின் விருப்பமாகும், மேலும் இந்த விருப்பத்தை நிறைவேற்ற, மக்கள் நடைப்பயணத்திற்கு செல்கிறார்கள். பயணம் என்பது உலகின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும், ஒரே இடத்தில் தொடர்ந்து வேலை செய்வதற்கு மாறாக 2 முதல் 3 நாட்கள் பயணம் செய்வது மனதிற்கு வித்தியாசமான மகிழ்ச்சியை அளிக்கிறது மற்றும் உங்களை ஓய்வெடுக்க வைக்கிறது. நெய்தல் நிலம் சார் வாழ்வியலை கொண்ட சுற்றுலா தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டம்.

  


'நெய்தல் நிலத்தின் முற்காலச் சூழலை அறியச் செய்யும் காரங்காடு'




கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமான கடற்கரைப் பகுதிகளில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடற்கரைச்சோலைகள், துறைமுகங்களின் சூழல்களை சங்க இலக்கியங்கள் வருணிக்கின்றன. பழமை மாறாமல் ஒரு கடற்கரைச்சோலையும், துறைமுகமும் இருந்திருந்தால் அது எப்படி இருக்குமோ அத்தகைய சூழல் தற்போதும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள காரங்காட்டில் காணப்படுகிறது. இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு கூறியதாவது,


சூழலியல் பூங்கா




ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள காரங்காட்டில் கோட்டைக்கரை ஆறு மூன்றாகப் பிரிந்து கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில்  இயற்கையான சதுப்பு நிலக் காடுகள் 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளன. களிமண்பாங்கான கடற்கரைப்பகுதியான இங்கு நண்டுகள், நத்தைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆழம் குறைவான இப்பகுதியில் கடல் புறா, கொக்கு, நெடுங்கால் உள்ளான், நத்தைகொத்தி நாரை, கூழைக்கடா, தாரா, கரண்டிவாயன், நீர்ச்செறகி, நீர்க்காகம் ஆகிய பறவைகள் வசிக்கின்றன. மழைக்காலங்களில் பிளமிங்கோ, தேன்பருந்து, கடல்பருந்து ஆகியவை இங்கு வந்து செல்கின்றன. ஆவுலியா எனப்படும் கடல்பசு, கடல் முள்ளெலி உள்ளிட்ட அரியவகை கடல் விலங்குகளின் இருப்பிடமாக விளங்கும் இந்த உப்பங்கழியின் இருபுறமும் அழகாக வளர்ந்துள்ள அலையாத்திக் (மாங்குரோவ்) காடுகள் கண்ணுக்கு விருந்தாகிறது.


அலையாத்திக் காடுகள்




இக்காடுகள் மீன்கள், நண்டுகள், சிப்பிகள், இறால்கள் என பலவகைப்பட்ட உயிரினங்களுக்கு உணவுக்களமாகவும், இனப்பெருக்கம் செய்யும் களமாகவும் விளங்குகின்றன. இவை புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாக்கின்றன. அலைகளோடும், மழைநீரோடும் கலந்துவரும் வளமிக்க வண்டல் மண்ணை இவை வேர்களில் தேக்கி வைத்து வளமான நிலப்பகுதி உருவாக உதவுகின்றன. இம்மரங்களின் கட்டைகள் கட்டுமரங்கள் செய்யப் பயன்படுகின்றன. இம்மரங்களின் கிளைகளில் இருந்தும் தண்டுகளில் இருந்தும், வளரும் முட்டுவேர்கள் கூடுதல் வலுவைத் தந்து இவை சாய்ந்துவிடாமல் நிலைத்து நிற்க உதவுகின்றன. நீர் தேங்கி நிற்கும் களிமண் பாங்கான இடங்களில், வாயு பரிமாற்றம் நடைபெறுவது மிகக் குறைவு என்பதால் இப்பகுதிகளில் ஆக்சிஜனின் அளவு மிகக் குறைவாக இருக்கிறது. இதனால் இவை புவியீர்ப்பு விசைக்கு எதிராக மண்ணிலிருந்து மேல்நோக்கி வளரும் சுவாச வேர்களைக் பெற்றுள்ளன. இவ்வேர்களில் உள்ள சுவாசத் துளைகள் வழியாக சுவாசம் நடைபெறுகிறது.


 


துறைமுகம்


தமிழ்நாட்டின் 1076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் சுமார் 250 கி.மீ. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பகுதிகளில் ஓடைகள், காட்டாறுகள் அதிகமாக உள்ளன. இவை கடலில் கலக்கும் இடங்களில் உள்ள உப்பங்கழிகள் மூலம் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. பழங்காலத்தில் கரையிலிருந்து பல கி.மீ தூரத்தில் ஆழ்கடலில் நிற்கும் கப்பல்களிலிருந்து படகுகளில் சரக்குகளை ஏற்றி வந்து கரையில் இறக்குவதற்கு உப்பங்கழிகள் உதவியாக இருந்துள்ளன. 13, 14ஆம் நூற்றாண்டுகளில் முத்தூற்றுக்கூற்றம் எனும் நாட்டுப்பிரிவில் தொண்டி, நானாதேசிப்பட்டினம், சுந்தரபாண்டியன்பட்டினம், முத்துராமலிங்கபட்டினம், பாசிப்பட்டினம், நீர்ப்பட்டினம் ஆகிய துறைமுகப் பட்டினங்கள் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.




தீர்த்தாண்டதானத்தில் உள்ள சிவன் கோயில் கல்வெட்டுக்கள் இவ்வூரை திட்டானம் என்றும் இங்கு வணிகக்குழுக்கள் தங்கி இருந்ததையும் குறிப்பிடுகிறது. திட்டானம்  என்றால் மரக்கலம் நிறுத்தும் மேட்டுப்பகுதி என்று பொருள். இதன் அருகில் உள்ள ஊர் வட்டானம். வட்டானம் என்பது வட்டவடிவமான மரக்கலத்தைக் குறிக்கிறது. இங்கு வட்டவடிவமான பரிசல் கட்டும் தொழில் நடந்திருக்கலாம். தளி மருங்கூர் ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் வீரகேரளபுரமான நானதேசிப்பட்டினம் என பெயர் பெற்றிருந்தது. காரங்காடு தேவாலயத்தின் பின்புறம் உள்ள உப்பங்கழிப் பகுதியில் அதிகளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூரில் இருந்து இலங்கைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்பானைகள் ஏற்றுமதியானதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மேலும் இவ்வூரில் உள்ள இயற்கையான உப்பங்கழி ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாக காட்சியளிக்கிறது. எனவே கல்வெட்டுகள் சொல்லும் நீர்ப்பட்டினம் எனும் துறைமுகம் காரங்காடாக இருக்கலாம். நம் சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும் காப்பதில் பெரும் பங்கு வகிக்கும்  இத்தகைய தாவர, விலங்கு, பறவைகளை நாம் அறிந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.