பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.
அறுபடைவீடுகளில் மூன்றும் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோவில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது.
பிற்பகல் நேரத்தில் மலைக்கோயிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக்குமாரசாமி, மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார். தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்சசியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சூரர்களை சம்ஹாரம் செய்த நிலையில் நாளை சண்முகர் -வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது. திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.
விழாவில் 7-ம் நாள் 28-ம் தேதி பழனி கோயிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. காலை 10.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7.00 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.