வீடு முழுக்க விளையாட்டு வாசம் மணத்துக் கிடந்தது. பதக்கங்களும், ஹாக்கி பேட்டுகளும், ஹாக்கி பந்துகளும், ஸ்போர்ட்ஸ் வியர்ஸ்களும், வெற்றிக் கேடயங்களும் என வீடே நிறைந்திருந்தன. ஒரு கால் சாய்த்தபடி கால்பந்தாட்ட வீரர் போல வீட்டு வேலைகளை சுழன்று கவனத்துக் கொண்டார் மாற்றுத்திறனாளி தீபா. சிரித்த முகத்தோடு நம்மை வரவேற்ற அவருக்கு பின்னால் ஏக்கமும் நிறைந்து கிடக்கிறது.  40 வயதை எட்டிய தீபா சர்வதேச மாற்றுத்திறனாளிகள் போட்டியில் பதக்கங்களை வென்று துணிவு மற்றும் சாகச செயலுக்காக தமிழ்நாடு அரசிடம் கல்பனா சாவ்லா விருது பெற்றவர்.



 

தீபாவின் கணவர் மரிய ஜான்பால், ஹாக்கி போட்டிக்காக தனது வாழ்க்கையை அற்பணித்து கோப்பைகளை வென்றவர். தற்போது ஹாக்கி கோச்சாகவும், இண்டர்நேஷனல் ஹாக்கி நடுவராகவும் இருந்து வருகிறார். தீபா - மரியஜான் தம்பதிக்கு ஜோவினா  மற்றும் ஜோனிசா என இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இருவரும் தற்போது ஹாக்கி போட்டியில் மாநில, தேசிய விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். ஆனால் இந்த குடும்பத்திற்கு தற்போது வரை அரசு சார்பாக முழுமையான அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது, என வேதனை தெரிக்கின்றனர். மதுரை எல்லீஸ் நகரில் உள்ள அவர்களது வீட்டிற்கும், தங்களது வீட்டின் அருகிலேயே உள்ள ஹாக்கி கிரவுண்டுக்கும் சென்று அவர்களுடன் கலந்துரையாடினோம்.



தொடர்ந்து நம்மிடம் தீபா பேசத்தொடங்கினார்...," பிறந்தது உசிலம்பட்டி அருகே உள்ள சொக்கதேவன்பட்டி,  3 வயதிலேயே எனக்கு போலியோ அட்டாக் தாக்கிருச்சு. உடம்பு சரியில்லாத பெண்ணாக என் வாழ்க்கையை துவங்கினேன். சக குழந்தைகள் விளையாடும் போது வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்று விளையாட்டுத் துறையில் கால் பதித்தேன். வட்டு எறிதல், குண்டு எறிதல்  உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஈடுபடுத்திக் கொண்டு மாநில, தேசிய விளையாட்டுக்களில் தங்கம் மற்றும் வெள்ளிகளை குவித்தேன். இதனால் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற முடிந்தது. எறிதல் போட்டியில் ஏசியன் கேம், உலக பேட்மிட்டன் போட்டியிலும் பரிசு பெற்றதை தொடர்ந்து எனக்கு 2010-ல் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கையால் சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது கிடைத்தது.



அப்போது என்னிடம் முதல்வர் அரசு வேலை தருவதாக உறுதி அளித்தார். ஆனால் அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அரசு வேலை கிடைக்காமல் போனது. கலைஞர் கையில்  விருது வாங்கியதற்காக  வேலை கிடைக்காமல் இருந்தது. என்னைப் போன்று விருது வாங்கிய நபர்களுக்கெல்லாம் வேலை கிடைத்துவிட்டது. எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. தலையாரி வேலைக்கு கூட முயற்சி செய்து வேலை கிடைக்கவில்லை. என் கணவரும் ஹாக்கி போட்டியில் சாதித்து கோச்சாகவும் சர்வதேச ஹாக்கி போட்டி நடுவராகவும் இருந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு நிரந்த பணி கிடைக்கவில்லை. இந்த சூழலில்தான் எங்கள் இரண்டு பெண் குழந்தைகளும் ஹாக்கி விளையாடி வருகின்றனர். எனக்கு அரசு வேலை கிடைத்தால்தான் விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். சிறப்பாக விளையாடினால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற எண்ணம் தோன்றும். எனவே தமிழக முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சரும் எனக்கு அரசு வேலை வழங்கி உதவ வேண்டும்" என்றார் தழுதழுத்த குரலில்.



 

ஹாக்கி மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தீபாவின்,  மூத்தமகள் ஜோவினா நம்மிடம்...," நானும் என் தங்கை ஜோனிஷாவும் ஹாக்கி பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.  நான் தற்போது 9-வது படிச்சுக்கிட்டு இருக்கேன். தங்கை 6-வது படிக்கிறாள். நான் 8-வது படிக்கும் போதே நேசனல் போட்டிகளில் பங்கேற்றுவிட்டேன். தற்போது தங்கை ஸ்டேட் விளையாடிக் கொண்டிருக்கிறாள். இருவருக்குமே ஒலிம்பிக்ஸ் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது.



அதற்கான இலக்கை நிர்ணயித்து தான் விளையாடுகிறோம். ஆனாலும் எங்களை சுற்றியுள்ள சிலர் நீங்களும் உங்க அம்மா மாதிரி வேலை கிடைக்காமல் வாழ்க்கையை தொலைக்க போறீங்களான்னு? கேக்குறாங்க எனவே எங்க அம்மாவிற்கு முதல்வர் ஐயா உடனடியாக வேலை வழங்கனும். அதேபோல  நிலை மாறணும். விளையட்டுத்துறையில் சாதிக்கும் ஒவ்வொரு  நபரும் அங்கீரிக்கப்பட்டு வேலை வாய்பில் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் எங்களை போன்ற இளையோருக்கு நம்பிக்கை பிறக்கும்" என்றார்.

 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண