1999 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த தமிழ்நாட்டின் முதல் உழவர் சந்தையான மதுரை உழவர் சந்தை 25 ஆண்டு நிறைவு செய்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் முதல் உழவர் சந்தை
மறைந்த முன்னாள் கலைஞர் கருணாநிதி கடந்த 1999-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டின் முதல் உழவர் சந்தையாக மதுரை அண்ணா நகர் உழவர் சந்தையை திறந்து வைத்தார். தி.மு.க.,வின் கனவு திட்டங்களில் இதுவும் என்று சொல்லும் வகையில் தற்போது தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த உழவர் சந்தையானது 26-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
அன்று ஆரம்பித்த போது என்ன பரபரப்பும் சுறுசுறுப்பும் விற்பனையும் இருந்ததோ அதே சுறுசுறுப்புடன் விற்பனையுடன் மக்கள் பேராதரவுடன் இன்றும் இயங்கி வருகிறது. விவசாயிகளின் நண்பனாகவும், பொதுமக்களின் நலனின் அக்கறை கொண்ட தலைவராகவும் இருந்த கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட முத்தான திட்டமான உழவர் சந்தை திட்டம் என்பது இன்று மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது.
இந்த உழவர் சந்தை மூலம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நல்ல ஒரு நட்பு பாலத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் விவசாயிகளுக்கு விளைப் பொருளுக்கு நியாயமான விலையும், பொதுமக்களுக்கும் மலிவு விலையிலும் அனைத்து காய்கறிகளும் கிடைகின்றன.
உழவர் சந்தைக்கு வரும் இது பொதுமக்களுக்கும் இனிப்புகள்
இத்தகைய உழவர் சந்தை 26ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உழவர் சந்தை முழுவதும் வாழைமரம், தோரணம், கோலம் என பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டு வேளாண் விற்பனை வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தலைமையில், முன்னாள் வேளாண் விற்பனை வாரிய தலைவர் அக்ரி.கணேசன் முன்னிலையில் உழவர் சந்தையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறிகளை விற்பனை செய்து வரும் விவசாயிகளைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும், கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து உழவர் சந்தைக்கு வரும் இது பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கலைஞர் அவர்கள் உழவர் சந்தையை தொடங்கி வைத்தது முதல் இன்று வரை 25 ஆண்டுகளாக விற்பனை செய்யும் விவசாயிகள் பலர் இன்றும் இங்கு வணிகம் செய்து வருகின்றனர்.
தினமும் 19 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனை
மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பல விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக இங்கே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாது மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறிகளையும் நேரடியாக விவசாயிகள் இங்கே கொண்டு வந்து பொதுமக்களிடையே விற்பனை செய்து வருகின்றனர். இங்கு மொத்தம் 130 கடைகள் உள்ளது, இதில் 110 கடைகள் வரை தினமும் செயல்படும், விடுமுறை நாட்கள் வார நாட்களில் மட்டும் அனைத்து கடைகளும் செயல்படும், தினமும் 15,000 கிலோ காய்கறிகள் விற்பனை ஆகிறது, 8 லட்சம் வரை தினமும் விற்பனை நடக்கின்றது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 19 ஆயிரம் கிலோ காய்கறி விற்பனையும் 10 லட்சம் ரூபாய் விற்பனை நடக்கும். நாள் ஒன்றுக்கு 4000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு வருகின்றனர்.
வரவேற்பால் தொய்வு இல்லாமல் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் வேளாண் விற்பனை வாரிய தலைவர் அக்ரி கணேசன், ” கடந்த 1999ம் ஆண்டு திமுக ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் மதுரை அண்ணா நகர் உழவு சந்தையானது கலைஞர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இது விவசாயிகளின் விளைபொருட்கள் நேரடியாக நுகர்வோர்களை வந்தடையும் விதமாக உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் லாபம் கிடைக்கும் வகையில் திட்டத்தை கலைஞர் அவர்கள் உருவாக்கி செயல்படுத்தினார். விவசாயிகள் மற்றும் மக்களின் வரவேற்பால் தொய்வு இல்லாமல் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று தற்போது இந்த உழவர் சந்தையானது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்றார்.