எழுத்து, படிப்பு, பேச்சு என இவற்றில் இரண்டற கலந்தவர்கள் அண்ணாவும் கலைஞரும். அப்படிப்பட்ட அண்ணாவுக்கு அவர் பெயரிலேயே சென்னை கோட்டூர்புரத்தில் பிரம்மாண்டமாக நூலகம் எழுப்பினார் கலைஞர் கருணாநிதி. இப்போது அவரது நூற்றாண்டு விழாவில் கலைஞர் பெயரில் தமிழ்நகரான மதுரையில் இன்னொரு பிரம்மாண்ட நூலகத்தை திறக்கவிருக்கிறார் அவரது மகனும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.


ஜூலை 15-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்ததும் தெரியும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிஞ்சுமா என்று. கட்டட திட்டத்திலோ, நூல்களின் என்ணிக்கையிலோ, ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளிலோ ஒன்றுக்கொன்று சளைக்காமல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எந்த நூலகம் எந்த நூலகத்தை மிஞ்சினாலும் அதனால் பயனடையப்போவதும் அறிவை விரிவாக்கிக் கொள்ளப்போவதும் தமிழ்நாட்டு மக்கள்தான்.


அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமரா நூலகம், தேவநேய பாவணர் நூலகம் என மிகப்பெரிய நூலகங்கள் எல்லாம் தலைநகரான சென்னையில் இயல்பிலேயே அமைந்திருந்தாலும் இப்போது மதுரையில் முதல்வர் திறக்கவிருக்கக்கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் தமிழக மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.







நாளை மறுநாள் (ஜூலை 15ல்) திறக்கப்படக்கூடிய கலைஞர் நூலகம் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி-நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்புகள் கண்களை விரியச் செய்யும் வகையில் வியக்க வைக்கின்றன.


இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உங்களில் ஒருவனான நான் எண்ணியதைவிடவும், வேறு யாரும் எண்ணிப் பார்க்க முடியாத வகையிலும் எதிர்காலத் தலைமுறையின் அறிவாற்றலைப் பெருக்குகின்ற வகையில் தென் தமிழ்நாட்டின் அறிவுத் திருக்கோயிலாக மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. அது வருங்காலத் தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கும்படியான வாய்ப்புகளுக்கு வாசலாக - வழிகாட்டியாக நிச்சயம் இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.


படிக்கும் பழக்கம் குறைந்து வருகிற காலத்தில் இத்தகைய பிரம்மாண்ட நூலகம் எதற்கு என்று வயிற்றெரிச்சல் அரசியல்காரர்கள் குமுறிக் கொண்டிருந்தாலும், மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தி வளர்ப்பதற்கும், நேரடி நூல் வாசிப்பு மட்டுமின்றி, பல்வேறு தொழில்நுட்பங்களின் வாயிலாகக் கற்று உலகத் தரத்திற்கேற்ப தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களையும், இளைய தலைமுறையினரையும் உயர்ந்து நிற்கச் செய்யவும் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் மதுபான கடைகள் ஊர் ஊராக திறந்திருக்கும் நிலையில், வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை செய்யும் நூலகம் திறப்பை நாம் அனைவரும் மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும்.