மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா, தனது 102வது வயதில் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் தகவலில்..,” முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவரும், சி.பி.ஐ(எம்) மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102), வயது மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (நவம்பர் 15) காலை 9.30 மணியளவில் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவருக்கு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.
தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை பூர்வீகமாக கொண்டது தோழர் என்.சங்கரய்யாவின் குடும்பம். நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியினருக்கு 1922 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள், 2-வது மகனாக பிறந்தார் என்.சங்கரய்யா. அவருக்கு முதலில் பிரதாப சந்திரன் என்று பெயர் வைக்கப்பட்டு, பின்னர் அவருடைய பாட்டனாரின் பெயரான சங்கரய்யா என்ற பெயர் சூட்டப்பட்டது. மதுரை நகராட்சியில் பொறியாளராக பணி கிடைத்ததை ஒட்டி, நரசிம்மலுவின் குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும் ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்தார் சங்கரய்யா. 1937ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். மாணவ பருவத்திலேயே இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திலும், விடுதலை போரிலும் தீரத்துடன் பங்கேற்ற தலைவராக விளங்கினார். அவர் முன்னணியில் நின்று ஒருங்கிணைத்த கூட்டங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். “We are not job hunters; we are freedom hunters” என்ற முழக்கத்துடன் களம் கண்டதை எப்போதும் பெருமையுடன் நினைவு கூர்வார் என்.சங்கரய்யா.
நாட்டின் அரசியல் விடுதலையோடு சமுதாய விடுதலையையும் லட்சியமாகக் கொண்டு 1940 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். விடுதலை போராட்டத்தை ஒடுக்க முற்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி நிர்வாகம் மாணவர் சங்கரய்யாவையும் கைது செய்தது. பட்டப்படிப்பின் இறுதித் தேர்வுக்கு 15 நாள்களே இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கல்லூரி கல்வி பாதியில் நின்றது. கல்வியா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்விக்கு நாட்டின் விடுதலையும், பொது வாழ்க்கையும் முக்கியம் என முடிவு செய்தார். 1942 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மதுரை மாவட்டச் செயலாளராக திறம்பட செயலாற்றினார். 1946-ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய கப்பற்படை எழுச்சி பம்பாயில் தொடங்கி கல்கத்தா, சென்னை என்று அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. இந்தப் பின்னணியில் தான் கம்யூனிஸ்ட்டுகள் மீது மதுரை சதி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மீண்டும் சிறைப்படுத்தப்பட்ட தோழர்கள் என்.சங்கரய்யா, பி.ராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி ஆகிய தலைவர்கள் 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவுதான் விடுதலையானார்கள்.
விடுதலைப் போராட்டத்தின் போதும், அதன்பின்னரும் எட்டு ஆண்டுகள் சிறையிலும், நான்கு ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து இயக்கப் பணியாற்றியவர் தோழர் என்.சங்கரய்யா. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கி வளர்த்தவர்களில் ஒருவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலிலிருந்து வெளிநடப்பு செய்த 32 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர். 1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோது அதில் முக்கியப் பங்காற்றினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் மற்றும் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆகிய பொறுப்புகளிலும் செயல்பட்டுள்ளார். 1995 முதல் 2002 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மாநிலக்குழுவின் செயலாளராக பணியாற்றினார். 1967, 1977 மற்றும் 1980 தேர்தல்களில் போட்டியிட்டு மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு தொகுதிகளிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சி மொழியாக தமிழே விளங்க வேண்டும் என்று கர்ஜித்த சிம்மக்குரல் அவருடையது. பேரவையில், சி.பி.ஐ(எம்) சட்டமன்ற குழுவின் தலைவராக இயங்கி பாட்டாளி வர்க்கத்தின் குரலாக விளங்கினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, மக்கள் ஜனநாயகப் புரட்சியிலும் உறுதியாக நின்றவர். அவருடைய உரைகளில் உழைக்கும் வர்க்கத்தின் கருத்துக்களை எளிமையாகவும், வலிமையாகவும் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க பேச்சாளர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை வளர்த்தெடுத்த தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யா, அகில இந்திய பொதுச் செயலாளர் மற்றும் அகில இந்திய தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் நெடுங்காலம் பணியாற்றியவர். தீக்கதிர் நாளேடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடாக அறிவிக்கப்பட்டு வெளிவந்த போது, முதல் ஆசிரியராக பணியாற்றியவர். சாதிய வன்முறை மற்றும் வகுப்புவாத அபாயம் தலைதூக்கிய நேரங்களில் அதற்கு எதிராக மக்களை ஒற்றுமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர். சொந்த வாழ்க்கையில் கம்யூனிஸ்ட் நெறிமுறைகளை இறுதி வரையிலும் கடைப்பிடித்தவர் தோழர் என்.சங்கரய்யா. கட்சிக் குடும்பத்தைச் சேர்ந்த நவமணியுடனான அவரது திருமணம் சாதி-மத மறுப்பு காதல் திருமணமாகும். இந்தத் தம்பதியருக்கு சந்திரசேகர், நரசிம்மன் என்ற மகன்களும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். தன்னுடைய குடும்பத்தில் அனைவரும் சாதி-மத மறுப்பு திருமணம் செய்துகொள்ள காரணமாக அமைந்தவர். தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருதை உருவாக்கி முதல் விருதை தோழர் சங்கரய்யாவுக்கு அவரது நூறாவது பிறந்த நாளின் போது வழங்கி சிறப்பித்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தினருக்கும், தமிழ்நாட்டின் இளம் தலைமுறைக்கும் முன்னுதாரணமாக அமைந்த அப்பழுக்கற்ற தொண்டறம் தோய்ந்த தூய வாழ்க்கைக்கு சொந்தக்காரர். அவருடைய இழப்பு இட்டு நிரப்ப முடியாத, ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். எப்போதும் போராட்ட வரலாறாக அவருடைய வாழ்க்கை ஒளிவீசி நமக்கு வழிகாட்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அனைத்து கிளைகளும் கட்சியின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தோழர் சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய புரட்சிகர லட்சியத்தை உறுதியாக பின்பற்றுவோம்” என்றார்.