சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்திய அரசியலமைப்பில் `சிரிப்பது ஒரு கடமை’ என ஒவ்வொரு குடிமகனுக்கும் விதிக்குமாறு திருத்தப்பட வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் காமெடியாகப் பதிவிட்டு அதற்காக கைது செய்யப்பட்டவரின் வழக்கை தள்ளுபடி செய்யும்போது பரிந்துரைத்துள்ளார். 


விளையாட்டாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஒருவரின் மனுவின் மீதான விசாரணையின்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவைக் கலைஞர்கள், கார்ட்டூனிஸ்ட்கள் முதலானோர் தன்னைப்போல ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு கூற நேர்ந்தால் எப்படி இருக்கும் எனக் கூறியுள்ளார். 



நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்


 


இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 51ஏ-கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைக் குறிப்பிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், `இந்தப் பட்டியலில் புதிதாக மற்றொரு கடமையைச் சேர்க்க வேண்டும். அது `சிரிப்பது’. மேலும், அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 19-ன் கீழ், சிரிப்பை வரவழைப்பதற்கான உரிமையையும் சேர்க்க வேண்டும். சிரிப்பை வரவழைப்பது என்பது தனி; பிறரைப் பார்த்து சிரிக்க வைப்பது என்பது தனி’ எனக் கூறியுள்ளார். 


மதுரையில் சி.பி.ஐ (எம்.எல்) கட்சியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது இந்த விசாரணை நடந்தது. கடந்த செப்டம்பர் 16 அன்று, தன் மகள், மருமகன் ஆகியோருடன் சிறுமலைப் பகுதிக்கு சுற்றுலா சென்ற மதிவாணன் தன் பேஸ்புக் பக்கத்தில் `ஷூட்டிங் பயிற்சிக்காக சிறுமலைப் பயணம்’ எனப் பதிவிட்டார். 


எனினும், மதுரையின் வாடிப்பட்டி காவல்துறையினர் இந்தப் பதிவு அச்சுறுத்தக் கூடியதாக இருப்பதாகக் கூறியதோடு, மதிவாணன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 



மதிவாணன்


 


இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிபதி சுவாமிநாதன், ``எதைப் பார்த்து சிரிப்பது?’ என்பது இங்கு அபாயகரமான கேள்வி. ஏனெனில் வாரணாசி முதல் வாடிப்பட்டி வரை, நாம் புனிதப் பசுக்கள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு கொண்டிருக்கிறோம். அவற்றை யாரும் கிண்டல் செய்ய முடியாது. புனிதப் பசுக்களை எப்படி அணுக வேண்டும் என்று நமக்கு எதுவும் தெரியாது. எனவே இது வெவ்வேறு நபர்களுக்கும், வெவ்வேறு பகுதிகளுக்கும் மாறி மாறி வெவ்வேறு அணுகுமுறைகளாக இருக்கும். உணவு எதுவும் உண்ணாமல், நோய் தாக்கப்பட்டு இருந்தாலும் யோகியின் பகுதியில் உள்ள பசு, புனிதப் பசுவாகவே கருதப்படும். மேற்கு வங்கத்தில் தாகூர் மிகவும் பிரபலமானவர் என்பதைச் சில கேள்விகளின் மூலம் குஷ்வந்த் சிங் உணர்ந்து கொண்டார். நமது தமிழ்நாட்டில் பெரியார் என்பவர் ஒரு புனிதப் பசு. கேரளாவில் மார்க்ஸ், லெனின் ஆகியோர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள். மகாராஷ்ட்ராவில் சிவாஜி, சாவர்க்கர் ஆகியோரை விமர்சிக்க முடியாது. இவை அனைத்தையும் போல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு புனிதப் பசு இருக்கிறது. அது `தேசியப் பாதுகாப்பு’ எனக் கூறியுள்ளார். 


இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்வதற்கு முன்பு, `மனுதாரர் 62 வயதானவர். அவர் பதிவிட்ட படங்களில் அவரது மகளும், மருமகளும் இருக்கின்றனர். மேலும் சிறுமலையின் அழகையும் சில படங்கள் காட்டுகின்றன. மேலும் எந்த ஆயுதமும் மனுதாரரிடம் இருந்து பெறப்படவில்லை. மனுதாரர் அரசுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்றோ, அதனைக் குறித்த வேறு செயல்களையோ செய்யவில்லை. வழக்குப்பதிவு செய்யப்பட்டதே சட்டத்தை அவமதிக்கும் செயல்’ எனக் கூறினார் நீதிபதி சுவாமிநாதன்.