தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்து விட்டதால்  வழக்கை முடித்து வைத்து  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தை அமைத்து அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி சேர்ந்த அர்ஜூனன் உயர் நீதிமன்ற கிளையில் 2018 ஆம் வருடம் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

அதில், விசாரணை ஆணையம் முறைப்படி அமைக்கவில்லை. இந்த ஆணையம் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நேரடி சாட்சிகளை மட்டுமே விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்த ஆணையம் மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மட்டுமே விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. மே 23, 24 ஆகிய இரு நாட்களும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கவில்லை. எனவே விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையும் விசாரணையை முடித்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.



மற்றொரு வழக்கு


முதுநிலை மருத்துவர் பிரிவில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

 

மருத்துவர்கள் ஸ்ரீநந்தினி, பாக்கியராஜ், புதியசாமி, ஆனந்த் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதில்," முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2020 நவம்பரில் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இடங்களில் ஏற்கனவே  மருத்துவப் பணி செய்து வரும் அரசு மருத்துவர்களுக்கு 50% இடமும்,  சில முன்னுரிமைகளும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அரசுப்பணியில் இல்லாத மருத்துவர்கள் சிரமத்திற்கு ஆளாவர். இது சட்ட விரோதமானது. ஆகவே, முதுநிலை மருத்துவர் சேர்க்கை தொடர்பாக 2020 நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  "இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கும், மேல்முறையீட்டு வழக்கும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது. ஆகையால் அதன் சாதக, பாதகங்கள் குறித்து முழுமையாக அறியாமல் ரத்து செய்ய இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வரும்காலங்களில் பாதிப்புகள் இருப்பின் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் குறிப்பிட்டார்.