யூடியூப் போன்ற தளங்களில், கருத்து சுதந்திரம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? நீதிமன்றத்தில் உறுதி அளித்தும் அதனை மீறும் வகையில்  இவ்வாறு செயல்பட்டது ஏன்? என்று சாட்டை துரைமுருகன் தொடர்பான வழக்கில் மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை தீர்ப்புக்காக  ஜனவரி 5ஆம் தேதிக்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.


இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் துரைமுருகன் பேசிய விபரங்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டது. அதோடு நீதிமன்றத்தில் உறுதி அளித்த பின்னர் இதுவரை 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.




அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, என்ன வேண்டுமானாலும் பேசலாமா? விமர்சனம் செய்பவர்கள் அதை மட்டும் செய்து கொண்டிருக்காமல், சமூகத்திற்கு நலன் விளைவிக்கும் எதையாவது செய்யலாம். சாட்டை துரைமுருகன் தொடர்ச்சியாக இதே போல செய்து வருகிறார். யூடியூப் போன்ற தளங்களில், கருத்து சுதந்திரம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக இருக்கிறது. நீதிமன்றத்தில் உறுதி அளித்தும்  இவ்வாறு செயல்பட்டது ஏன்? நீதிமன்றம் இது போன்ற விசயங்களை ஊக்குவிக்க இயலாது எனக்கூறி வழக்கை தீர்ப்புக்காக ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண