கோவையை சேர்ந்த ஈஷா யோகா மையம் சார்பாக ஜெகதீஸ் வாசுதேவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது வழக்கறிஞர் தினேஷ் ராஜா மூலம் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து  அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் வெளிப்படைத் தன்மையுடன் தணிக்கை செய்ய வேண்டும். கோவில்களின் கட்டிட அமைப்பையும் அதனுடன் தொடர்புடைய நிலப் புலங்கள் குறித்தும், கோவில்களின் அசையும் அசையா சொத்துக்கள் குறித்தும்,அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்தும்  அவற்றின் வாடகை பாக்கி நிலவரங்கள் குறித்தும், கோவில்களில் வழக்கில் இருக்கும் சடங்குகளும் ஆன்மீக செய்முறைகளும் புழக்கத்தில் உள்ளனவா, அவற்றின் நிலவரம் என்ன என்பது குறித்தும், மக்களிடமிருந்து காணிக்கையாக பெறப்படும் தொகையின் நிலவரம் குறித்தும், கோவில் சார்ந்த செலவுகள் குறித்தும் வல்லுநர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். 

 




 

வல்லுநர்களையும் , ஆன்மிக வாதிகளையும்  கொண்டசிறப்பு  குழு  அமைத்து, கோவில் நிர்வாகம், கோவில் சடங்கு சம்பிரதாயங்களை முறையாய் கடைபிடிக்க படுகிறதா? என்று  ஆய்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


 



கோவில் நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கோவில் குளங்களை சுத்தப்படுத்தி, பராமரிப்பது, தூர்வாருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

 

மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்," இந்தியாவில் பல கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனக்கே உரிய சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 615 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு என 4.22 லட்சம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டிடங்களும், பல கோடி மதிப்பிலான தங்கம் வைர நகைகளும் உள்ளன.

 

இந்த கோவில்களில் இருக்கக்கூடிய குளங்களை முறையாக பராமரிக்கவும், அவற்றை புதுப்பித்து மழைநீரை சேமிக்கும் வகையில் மறுகட்டமைப்பு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் கோவில் குளத்தில் சேராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் குளங்களிலும் குப்பை மற்றும் சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும், மீறுவோர் மீது அதிக அபராதம் விதிப்பது, தண்டனை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும், கோவில் குளங்களை முறையாக தூர்வாரி பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில்,"கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கோவில் குளங்களை சுத்தப்படுத்தி, பராமரிப்பது, தூர்வாருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் இந்த வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.