செவிலியர் கொலைவழக்கில் கீழமை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு வாலிபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு செவிலியர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கழுத்தை நெரித்து கொலை செய்து நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கார்த்திக், மகேந்திரன், வசந்தகுமார், ராஜேஷ், கணேசன், சின்னத்துரை ஆகிய 6 பேர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை மகளிர் நீதிமன்றம், வசந்தகுமார் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்தது. மற்ற 4 பேரும் விடுதலை செய்தனர். இந்த தண்டனையை நிறைவேற்றுவது குறித்து இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இருவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
அதே போல் மூன்று கொலை செய்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்து 25 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி பேச்சித்தாய், இவர்களது 6 மகள்களில் மூத்த மகள் கோமதி (21). மனநிலை பாதித்தவர். வடக்குத்தெருவைச் சேர்ந்த முத்துராஜ் (எ) ஆண்டவர் ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த முத்துராஜ், கடந்த 2016ஆம் ஆண்டு பேச்சித்தாய் மற்றும் கோமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், பேச்சித்தாய் மற்றும் மற்றொரு மகள் மாரியையும் வெட்டிக் கொன்றார். மேலும், பேச்சித்தாயின் தந்தை கோவிந்தசாமியையும் வெட்டிக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், முத்துராஜூக்கு தூக்குத்தண்டனை விதித்தது.
இதை நிறைவேற்றுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறையினர் தரப்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வீ.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு ஆகியோர், கொலை வழக்கின் கீழான குற்றத்தை உறுதி செய்து முத்துராஜூவுக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!