மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று மாலை இராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றபோது ஊர்தியின் முன்பாக இளைஞர்கள் சிலர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஒலி எழுப்பியவாறு அதிவேகத்தில் , ஆபாசமான வார்த்தைகளை கூச்சலிட்டபடி சென்றுள்ளனர்.  இதனை கண்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்களின் செயலால் அச்சமடைந்தனர். இந்நிலையில் கல்லூரி வாயில் முன்பாக நின்றுகொண்டு இளைஞர்கள் கூச்சலிட்டபோது கல்லூரி வாசல் முன்பாக நின்றுகொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை காலேஜ்கிட்ட ஏன் இப்படி பண்றீங்க மாணவிகள் பயப்படுறாங்க என கூறியுள்ளார்.

 





இதனால் ஆத்திரமடைந்த அந்த மதுபோதை கும்பல் மாணவியின் தந்தையை தாக்கியதோடு, கல்லூரி வளாகத்திற்கு சென்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் மையமான கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மதுபோதையில் பட்ட பகலி்ல் இளைஞர்கள் செய்த இந்த அராஜக செயல்  சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.  

 





 

இதேபோன்று தேவர் ஜெயந்தியன்று  மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மகளிர் கல்லூரிகளுக்குள் புகுந்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து செல்லூர் காவல் ஆய்வாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது வீடியோ பதிவுகளை கொண்டு சம்மந்தப்பட்ட இளைஞர்களை தேடி வருவதாகவும், விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கோரிப்பாளையம் பகுதியில் கல்லூரி வாசலில் ரகளை- ஆறு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அச்சம்பத்து பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவஞானம்,நாகப்பிரியன், சதீஸ் குமார், அஜித்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.