கர்மா காரணத்தைக் கூறி அரசு துறை ஊழியர்களின் தண்டனையை ரத்து செய்ய முடியாது என அரசு தரப்பு வாதம் எழுந்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த முருகன் மதுரை காவல்துறையில் முதல் நிலை காவலராக பணியில் உள்ளார். இவர் பணியின் போது உரிய விடுப்பு கேட்காமல் விடுப்பு எடுத்துக் கொள்வது மற்றும் பணியில் கவன குறைவாக செயல்படுவது போன்ற காரணத்தால் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாற்றி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காவலர் முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஸ்ரீமதி கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு இந்த கோர்ட்டு, நிவாரணம் வழங்க முனைகிறது. அதாவது, கர்மாவின் கொள்கைகளில் "சஞ்சித கர்மா" (முழு கர்மா) "பிராரப்த கர்மா" (கர்மாவின் பகுதி) என்று பிரிக்கப்பட்டுள்ளது. "பிராரப்த கர்மா" (கர்மாவின் பகுதி)க்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் முதல் நிலைக் காவலர் பல தண்டனைகளை அனுபவித்து விட்டார். எனக்கூறி பணி மாற்றம் செய்த இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் மகேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி காவலர் இடமாற்றம் என்பது துறை ரீதியான நடவடிக்கை அதில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார் இது ஏற்றுக்கொள்ள முடியாது மேலும் இந்த பதவியில் இந்த இடத்திற்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் காவலருக்கு பணி இட மாற்றம் குறித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
கரூரில் அனுமதி இல்லாத கல்குவாரிகளுக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில், குவாரி உரிமையாளர் செல்வகுமாருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
கரூரில் மாவட்டத்தில் அனுமதி இல்லாத கல்குவாரிகளுக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுனர் சக்திவேல், கூலிப்படை கும்பலைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் குவாரி உரிமையாளர் செல்வகுமார் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இறந்த ஜெகநாதரின் தாயார் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என இடையிட்டு மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜாமீன் கோரி செல்வகுமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.