ரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் இந்திய ரயில்வே சேவை வழங்கி வருகிறது. மலிவான டிக்கெட்டுகள் மற்றும் வசதியான பயணம் காரணமாக ரயில் போக்குவரத்து சேவை இந்தியாவில் பிரபலமான போக்குவரத்து வசதியாக மக்களிடையே பிரபலமாக இருக்கிறது. இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு மலிவான பயணத்தை வழங்குவது மட்டுமல்லாமல், மலிவான காப்பீட்டையும் வழங்குகிறது. வெறும் 45 பைசா பிரீமியத்தில் ரயில்வே பயணக் காப்பீட்டை ரயில் பயணிகள் பெறலாம்.

Continues below advertisement

ரயில் விபத்தில் பயணிகளுக்கு ஏற்படும் இழப்பை இந்த பயணக் காப்பீடு ஈடுசெய்கிறது. ரயில் விபத்தில் ஒருவர் இறந்தால் காப்பீட்டுத் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. இது தவிர, காயம் ஏற்பட்டால் கூட அதற்கு கிளைம் செய்து பணம் வாங்கலாம். இந்திய ரயில்வே வழங்கும் பயணக் காப்பீட்டுத் திட்டம், IRCTC ஆப் அல்லது போர்ட்டல் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்குக் கிடைக்கும். டிக்கெட் கவுண்டரில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ரயில்வே பயணக் காப்பீடு கிடைக்காது. மேலும், பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி கிடையாது. இணையதளம் மற்றும் செயலியில் ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது ரயில்வே பயணக் காப்பீடு விருப்பம் இருக்கும். டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது நீங்கள் காப்பீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காப்பீட்டுக்கு 45 பைசா மட்டுமே வசூலிக்கப்படும்.

Continues below advertisement

நீங்கள் காப்பீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு ஒரு இணைப்பு வரும். இந்த இணைப்பு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு அனுப்பப்படும். இந்த லிங்க்கை ஓப்பன் செய்து, நாமினி விவரங்களை நிரப்ப வேண்டும். இன்ஷூரன்ஸ் பாலிசியில் நாமினி இருந்தால் காப்பீடு கிளெம் பெறுவது எளிதாக இருக்கும். ரயில் விபத்தில் பயணி ஒருவர் இறந்தால், காப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சம் கிடைக்கும். விபத்தில் ஒரு பயணி முற்றிலும் ஊனமுற்றால், காப்பீட்டு நிறுவனம் அவருக்கு ரூ. 10 லட்சம் வழங்கும். நிரந்தர ஊனம் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை ரூ. 7.5 லட்சம் கிடைக்கும். காயம் ஏற்பட்டால் மருத்துவச் செலவுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

 

இறந்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ரூ. 10,000 வரை வழங்கப்படும். ரயிலில் ஏறும் நேரம் மற்றும் இறங்கும் நேரம் உட்பட, பயணத்தின் தொடக்கத்திலிருந்து சேரும் நிலையத்தை அடையும் வரை இந்த காப்பீட்டு வசதி செல்லுபடியாகும்.இந்திய குடிமக்கள் மட்டுமே இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பெற முடியும். உறுதிப்படுத்தப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில்வே பயணக் காப்பீட்டைப் பெற முடியும். பொது பெட்டிகளில் பயணிப்பவர்களும் தகுதியற்றவர்கள் ஆவர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் வெளிநாட்டினர் இந்த ரயில்வே காப்பீட்டு வசதியைப் பெற முடியாது. ரயில் விபத்துகள் 1989 ரயில்வே சட்டம் பிரிவுகள் 123, 124, மற்றும் 124A ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள கொள்ளை, தீவிரவாத தாக்குதல், கலவரம் அல்லது ரயிலில் இருந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடந்தால் ரயில்வே பயணக் காப்பீட்டைப் பெறலாம். இந்த வசதி பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். ஆனால் பெரும்பாலான மக்கள் இதுபற்றி தெரியாமல் இருக்கின்றனர்.