ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணி - உள்ளூர் மேலாண்மை குழுவினர் ஆய்வு

மழைநீரில் நனைந்து இறுகியுள்ள ஜிப்சத்தை பொக்லைன் மூலம் உடைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக உதவி ஆட்சியர் தலைமையிலான உள்ளூர் மேலாண்மை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மழைநீரில் நனைந்து இறுகியுள்ள ஜிப்சத்தை பொக்லைன் மூலம் உடைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இதையடுத்து ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவது ஆகிய பணிகளுக்கு அனுமதி அளித்தது. 

மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மை குழுவை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அமைத்துள்ளார். இந்த குழுவினர் ஆலையில் உள்ள கழிவுகளை  அகற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதற்காக ஆலை வளாகத்திலும், நுழைவு வாயிலிலும் மொத்தம் 18 கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில்  உள்ளூர் மேலாண்மை குழுவினர் உதவி ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில், தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுரேஷ், மாவட்ட தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் சரவணன் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள், ஆலை மற்றும் நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதையும், அதற்கான கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆலையின் உள்ளே செல்லும் வாகனங்கள், ஆட்கள், ஆலையில் இருந்து வெளியில் வரும் ஆட்கள், வாகனங்கள் மற்றும் அகற்றப்படும் கழிவு பொருட்களின் விவரங்களை 3 பதிவேடுகளில் பராமரிக்க அறிவுறுத்தினர்.


ஆலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜிப்சம் மழையில் நனைந்து இறுகிய நிலையில் காணப்பட்டது. இதனை அகற்றுவதற்கு வசதியாக உடைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பொக்லைன் உள்ளிட்ட 2 கனரக இயந்திரங்கள் ஆலைக்குள் கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து ஜிப்சத்தை உடைத்து அள்ளுவதற்கு தயார் படுத்தும் பணி தொடங்கியது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜிப்சத்தை உடைப்பதற்காக கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் ஜிப்சம் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும். அதற்கு தேவையான ஆட்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement