தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார். 120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்த நிலையில் தி.மு.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்கப்புள்ளியா அல்லது கொடுத்த வாக்குறுதி இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கல்லுப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அம்மா கோவிலில் நடைபெற்றது. அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவை அம்மாவின் அரசு உருவாக்கி கொடுத்தது. அதுமட்டுமல்லாது முதல் அலை ஏற்பட்டபோது தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் பாரதப் பிரதமரின் பாராட்டை எடப்பாடியார் பெற்றார். மின் தட்டுப்பாட்டால் இருளில் மூழ்கியிருந்ததை அம்மா ஆட்சியில் தடையில்லா மின்சாரம் இருந்து தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றப்பட்டது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று சொன்னது தொடர்பாக கேட்டால் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள்.
வெள்ளை அறிக்கை எதற்கு? உங்களுக்குத்தான் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறதே! சட்டசபையில் நீங்கள் விவாதத்திற்கு வைக்கலாமே! நிதிநிலை அறிக்கையில் துறைக்கான நிதி நிலை எவ்வளவு அதனால் இழப்பு எவ்வளவு என்பது சட்டமன்றத்தில் நீங்கள் விவாதத்திற்கு வைத்தால் எல்லோரும் விவாதிக்கத் தயாராக இருக்கிறார்கள். நாட்டு மக்கள் குறிப்பாக அந்த விவாத்தை காண தயாராக இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் கொடுத்த வாக்குறுதியை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா அல்லது நீங்கள் கொடுத்த வாக்குறுதி இருந்து தப்பித்துக்கொள்ள நீங்கள் கொடுக்கும் இந்த வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா என்பதை இன்றைக்கு மக்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.
”2011-ஆம் ஆண்டில் இருந்து இன்றைக்கு வெள்ளை அறிக்கையாக விடுவோம் என்று சொல்லி மக்களை திசை திருப்பி இன்றைக்கு அ.தி.மு.க மீது களங்கத்தை பழியை சுமத்த நினைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அம்மாவின் அரசு இன்றைக்கு அமைந்திருந்தால் எடப்பாடியாரும் ஓ.பி.எஸ்ஸும் சாக்குப்போக்கு சொல்லி தப்பித்து இருக்க மாட்டார்கள். வாக்குறுதியை நிறைவேற்ற அவர்கள் ஆணையிட்டு இருப்பார்கள். பெண்களுக்கு இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும் என்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டது. ஆட்சி அமைந்து இருந்தால் ஒவ்வொரு இல்லத்திலும் வாஷிங் மெஷின் இருந்திருக்கும். ஆனால் காரணங்கள் சொல்லி காலம் தாழ்த்த மாட்டார்கள். அதுதான் அம்மா அரசிற்கும், தி.மு.க அரசுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். எங்கள் மீது சேற்றை வாரி இரைக்கலாம் அ.தி.மு.க மீது அம்மா அரசின் மீது நீங்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகள் சொல்-அம்புகள். கடந்த நான்கு ஆண்டுகளாக அதைத்தான் நீங்கள் பட்டியலிட்டு சொல்லியிருக்கிறீர்கள் கடந்த நான்காண்டுகளில் எங்கள் மீது பழி சுமத்துவதுதான் உங்கள் அரசியல் பணியாக இருந்தது" என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ‛எங்களுக்கே ‛டப்’ கொடுக்குறீயே... யாருய்யா நீ...’ போலி ‛கமிஷனர்’ விஜயனிடம் 24 மணி நேர விசாரணை!