ஜனநாயகத்திற்கு பேராபத்து வரும் போதெல்லாம், அதன் நான்கு தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் நீதித்துறைதான் கை கொடுத்துக் காப்பாற்றி நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. ஆனால், அந்த நீதித்துறையின் மேன்மைத் தன்மையையே கேலிக்கூத்தாக்கும் நிகழ்வுகளும் அவ்வப் போது அரங்கேறித்தான் வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்து தள்ளுபடி செய்யப்பட்டு, மீண்டும் புதுவேடமிட்டு வந்திருக்கும் ஆள்மாறாட்ட வழக்கு.



உயர்நீதிமன்ற மதுரை கிளை


சிவகங்கை மாவட்டம் கல்லலில், மதுரகவி ஆண்டவர் சுவாமிகள் எனும் மணிவாசக சரணாலய அடிகளால், மணிவாச நிலையம் என்ற வழிபாட்டு இடம் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டுள்ளது. கல்லல் சோமசுந்தர சவுந்தரநாயகி கோயில் திருத்தேரை உருவாக்கியவரும் இவர்தான் என்பதை, ந.மு.வெ. நாட்டாரின்  வரலாற்றுக் குறிப்பு நமக்குத் தெரிவிக்கிறது. மதுரகவி ஆண்டவர் சுவாமிகளுக்குப் பின்னர், சுமார் 70 ஆண்டுகளாக அவரது வழித்தோன்றல்களால், ஆண்டுக்கு மூன்று குருபூஜைகளும், நித்திய வழிபாடும் மணிவாசக நிலையத்தில் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.



மதுரகவி ஆண்டவர் சுவாமிகள்


காலப்போக்கில், சில சமூகவிரோத சக்திகள் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி மடத்தை ஆக்கிரமித்து,  அதனை ஒரு வர்த்தக வளாகமாக மாற்ற முயன்றதாகவும், அதனை மதுரகவி ஆண்டவர் சுவாமிகள் குடும்பத்தினரும், அவரது உறவினர்களும் எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.



வழிபாட்டு தலமாக இருக்கும் மணிவாச நிலையம்


இந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் நிலையில், குன்னங்கோட்டை நாடு என அழைக்கப்படும் அந்த வட்டாரத்தின் நாட்டுத் தலைவராகக் கருதப்படும் சுந்தரவடிவேல் என்பவர் (இவரை பட்டத்து ஐயா என அழைக்கின்றனர்), அந்த மடத்தில் மூன்று குருபூஜைகளில் ஒன்றான நாராயணசாமி குருபூஜையை இந்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி நாட்டார்கள் சார்பில் நடத்தப் போவதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்  கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதில், நாட்டார்கள் என்ற போர்வையில் இந்த மனுவைத் தாக்கல் செய்ய வைத்தவர்களே அந்த ஆக்கிரமிப்பு கோஷ்டிகள்தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மனு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தனிநீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.



உயர்நீதிமன்றம்


அப்போது, இந்த வழக்கைத் தான் தொடரவில்லை என்றும், அதற்கான மனுவில் தான் கையெழுத்துப் போடவில்லை என்றும் கூறி, மனுதாரரான சுந்தரவடிவேல் காவல்துறை மூலமாக நீதிமன்றத்திற்கு ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். இதனைப் பார்த்த நீதிபதி, சுந்தரவடிவேல் என்ற அந்த நபரை நேரில் கைபேசியில் அழைத்து, அவரே நேரடியாக விசாரித்தார். அப்போது, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த படி, அந்த வழக்கைத் தான் தொடரவில்லை என்றும், தனக்குத் தெரியாமலேயே அந்த வழக்கைத் தன் பெயரில் சிலர் தொடர்ந்து விட்டதாகவும் சுந்தரவடிவேல் நீதிபதியிடம் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, போர்ஜரியாக கையெழுத்திட்டு மனுத்தாக்கல் செய்தவர்கள் யாரென்பதை விசாரித்து, உண்மையைக் கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றப் பதிவாளர் காவல்நிலையத்தில் இதற்கான புகாரை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



நீதிமன்ற உத்தரவுபடி பதிவு செய்யப்பட்ட FIR


அதன்படி, நீதிமன்றப் பதிவாளர் புகாரளிக்க, மதுரை ஒத்தக்கடை காவல்நிலையத்தில் கடந்த 22.01.2022 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தியத் தண்டனைச் சட்டம் 419, 465, 466, 467, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் படி, குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், இந்த வழக்கைத் தான் தொடரவே இல்லை என நீதிபதியிடமே தொலைபேசியில் கூறிய சுந்தரவடிவேல் என்ற நபர், அப்படியே அந்தர் பல்டியடித்து, தான் கூறியபடித்தான் இந்த வழக்குத் தொடரப்பட்டது என்றும், அதனால் போர்ஜரிக் குற்றவாளிகளாக தேடப்பட்டு வருவோரை மன்னிக்கும்படியும் கோரி, தற்போது ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். முந்தைய விசாரணையின் போது, நீதிபதி கேட்ட பதற்றத்தில், தான் அவ்வாறு கூறிவிட்டதாகவும், அது உண்மயில்லை என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு தற்போது விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



16.02.2022 மாசிமகத்தன்று மடத்தின் குருவழிபாட்டுக் குழு சார்பாக நடைபெற்ற அன்னதானம்.


இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு தொடர்பான செய்திகள், அப்போதே செய்தித்தாள்களில் வெளி வந்துள்ளன. அதுமட்டுமின்றி ‘வழக்குத் தொடர்வதிலும் ஆள்மாறாட்டமா?’ என்று கேள்வி எழுப்பி, ஜனவரி 25 ஆம் தேதி இந்து தமிழ் நாளிதழில் தலையங்கமே தீட்டப்பட்டது.


அதில், “நீதிமன்றங்கள் அனைத்தும் வழக்குகளால் நிறைந்து வழியும்நிலையில், நீதிமன்ற அலுவலகங்களைப் போலவே வழக்கறிஞர்கள் அலுவலகங்களும் சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


அவற்றில், வழக்காடும் தரப்பினரின் அடையாளச் சான்றுகளைச் சரிபார்ப்பதும் முதன்மையான பொறுப்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு, புகார்தாரர் அவரது மாவட்ட எல்லைக்குள் பதிவுபெற்றுள்ள ஆணையுரை செய்துவைக்கும் ஆணையர் ஒருவரது முன்னிலையில் தனது பிரமாணத்தை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். உச்ச நீதிமன்ற வழக்குகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறையை உயர் நீதிமன்றங்களுக்கும் கீழமை நீதிமன்றங்களுக்கும்கூட விரிவுபடுத்தலாம். நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதில் ஆள் மாறாட்டங்களுக்கான வாய்ப்பு, முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டியது அவசியம்.” என்று நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஆள்மாறாட்ட மோசடி செய்வோர் ஊடுருவுவதற்கு வாய்ப்பாக சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.


இந்த ஆள்மாறாட்டம் மற்றும் போர்ஜரி வழக்கில் எழுந்துள்ள முக்கியமான கேள்விகள் இவைதான்:



  • நீதிபதி பிறப்பித்த உத்தரவின் படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிவடையாத நிலையில், பிடிபடாத போர்ஜரி குற்றவாளிகளை மன்னித்து விடுங்கள் என்று கோரி, அதே மனுதாரர் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்வது நீதித்துறையைக் கேலிக்கூத்தாக்குவதாகாதா?



  • நான் வழக்குத் தொடரவில்லை என்று கூறிய அதே   நபர், தற்போது நான்தான் வழக்கைத் தொடுக்கச் சொன்னேன் என்று மாற்றிக் கூறுவதை சட்டம் ஏற்குமா?  அல்லது நீதிபதிதான் ஏற்பாரா?



  • மனுதாரரின் யாரோ ஒருவர் பொய்யாகக் கையெழுத்தைப் போட்டு வழக்குத் தொடருவது சட்டப்படி சரியானதா? அதை நீதித்துறை சாதாரணமாகத்தான் கடந்து செல்கிறதா?


இந்தக் கேள்விகளுக்கான பதில், தற்போதைய ஆள்மாறாட்ட வழக்கில் நீதிபதி வழங்கப் போகும் தீர்ப்பின் வழியாகக் கிடைக்குமா என்பதுதான் நீதித்துறையின் பால் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கும் அப்பாவி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நீதிமன்றங்களுக்குள்ளேயே ஆள்மாறாட்ட மோசடிகள் மலிந்து வருவதைத் தடுப்பதற்கான சுவராகவும் அந்தத் தீர்ப்பு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.


அரசு நியாயவிலைக் கடைகளில், சில நூறு ரூபாய் மதிப்புள்ள பொருட்களை யாரும் தவறாக வாங்கிச் சென்று விடக் கூடாது என்பதற்காக பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தும் நாட்டில், விலைமதிப்பே இல்லாத நீதியின் மேன்மையைக் காக்கும் நீதிமன்றங்களில் அடையாளம் தெரியாதவர்கள் மனுதாரரின் கையெழுத்தைப் போட்டு மனுத்தாக்கல் செய்வதற்கான சூழல் நிலவுவது எத்தனை பெரிய அவலம்?


அப்பாவி மக்களின் கடைசிப் புகலிடமாக இருக்கும் நீதிமன்றங்கள், ஆள்மாறாட்டம் செய்வோர் போன்ற சமூகவிரோதிகளுக்கு புகலிடம் தரும் குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதுதான் நமது அச்சம்!